எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்

மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் கழகத்தினர் உறுதி ஏற்பு
சென்னை,
தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சியை அகற்றி விட்டு அம்மா ஆட்சியை அமைப்போம் என்று வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் கழகத்தினர் உறுதியேற்றனர்.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆர்.கே.நகர் மேற்கு பகுதிக்கு உட்பட்ட 41-வட்டம் கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் பகுதி துணை செயலாளர் எஸ்.சுயம்பு, கழக நிர்வாகி எஸ்.முருகேசன், ஆகியோரது ஏற்பாட்டில் 1500 பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் உணவு பொட்டலங்களை வழங்கினார்.
அதன்பிறகு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசியதாவது:-
ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள அனைத்து சுய உதவிக்குழுக்களை சேர்ந்த மகளிர் அமைப்புகளுக்கு நன்கு தெரியும் மறைந்த புனிதவதி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட இந்த தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது. சில சந்தர்ப்ப சூழ்நிலையால் தீய சக்திகளிடம் சென்று விட்டது. இந்த சுதந்திர தினத்தையொட்டி தீயசக்தி தி.மு.க.வை அப்புறப்படுத்த உறுதிமொழி ஏற்கும் தினமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கழக ஆட்சியில் அம்மாவின் திட்டங்களே இல்லாத இல்லங்களே இல்லை. அவர் செய்யாத சாதனைகளே இல்லை. தற்போது தி.மு.க. எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு மக்களுக்கு ஏதாவது தேவையான நல்ல திட்டங்களை செய்வார்களா என்றால் இல்லை.
அம்மா ஆட்சியில் பிறக்கும் குழந்தைகள் முதல் கல்லறை செல்லும் உறவுகள் வரை பல திட்டங்களை செயல்படுத்தி “மக்களுக்காகவே நான் மக்களால் நான்” “உங்களுக்காகவே நான் உங்களால் நான்” என்ற தாரக மந்திரத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
கழக ஆட்சி எப்போதும் மக்களுக்கான ஆட்சி. போலி வாக்குறுதிகளை வழங்க தெரியாது. அப்படி உறுதியான வாக்குறுதிகளை அளித்தால் அதை 100 சதவீதம் கடமை உணர்வோடு நிறைவேற்றிடும் கடமை அண்ணா தி.மு.க.வுக்கு உள்ளது. ஆகவே தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சியை அகற்றி விட்டு எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சியை அமைப்போம். அதை உறுதியாக ஏற்போம்.
கழக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை அவரது தலைமையில் கழகம் புத்துணர்ச்சியுடன் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டி, அம்மா மினி கிளினிக், திருமண உதவி திட்டம் உள்ளிட்ட அம்மாவின் திட்டங்களை மீண்டும் எடப்பாடியார் தலைமையில் நடைபெறும் நல்லாட்சியில் செயல்படுத்தப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இன்று சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஏ.கணேசன், எம்.ஏ.சேவியர், ஆர்.நித்தியானந்தம், என்.எம்.சீனிவாசபாலாஜி, எஸ்.முத்துசெல்வம், பி.கே.யுவராஜ், ஏ.வினாயகமூர்த்தி, மணல் ரவிசந்திரன், ஆர்.வேல்முருகன், எல்.எஸ். மகேஷ்குமார், ராமமூர்த்தி, லயன் ஜி.குமார், பிரசாந்த், மாரிமுத்து, பரசுராமன், கிருஷ்ணன், ரகு, ஏழுமலை, சந்திரசேகர், ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட பகுதி வட்ட பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.