துரைமுருகன் சொன்னதை கேட்ட பிறகும் வாய் நீளம் காட்டுவது வெட்கக்கேடானது

சென்னை,
துரைமுருகன் சொன்னதை கேட்ட பிறகும் நாக்கை பிடுங்கிக்கொள்ளாமல் மா.சு. வாய் நீளம் காட்டுவது வெட்கக்கேடானது என்றும் வாரிசுகளுக்கும் முறைவாசல் வேலை செய்து பதவிகளுக்கு வந்தவரல்ல, மா.சு.வின் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினை போல் தந்தையின் மடியில் தவழ்ந்து வாரிசு அடிப்படையில் பதவிகளை பிடித்தவர் அல்ல, எடப்பாடியார் என்று விடியா தி.மு.க. அரசின் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தன்னுடைய துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், மக்களின் உயிரைக்காக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறையை கடந்த 14 மாத காலமாக, தனது தற்குறி நிர்வாகத்தால் கோமா நிலைக்கு கொண்டு சென்ற, மா.சு. என்று ஆளும் கட்சியினரால் அன்போடு (?) அழைக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எங்களுடைய கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மீது அறிக்கை என்ற பெயரில் ஊளையிட்டிருக்கிறார்.
மக்கள் நலப்பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விட, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார், சுமார் நான்கரை ஆண்டுகள் நல்லாட்சி நடத்தியவர் என்பதால் அரசுக்கு வழிகாட்டுகிறார். இதுவே எதிர்க்கட்சியின் ஜனநாயகக் கடமை.
பிரச்சினைகளை தீர்க்கத்திணறி ஆலோசனை நடத்துவதிலும், குழு அமைப்பதிலும் காலம் கடத்திவரும் விடியா திமுக அரசு, பற்றி எரியும் போதைப்பொருள் பயன்பாட்டால் கதறிக்கொண்டிருக்கும் மக்களின் பிரச்சினைக்கு வழி தெரியாமல் பாதிக்கப் பட்டவர்களிடமே கருத்து கேட்பது, ஆட்சி நடத்த துப்பில்லை என்பதையே காட்டுகிறது.
மாணவ செல்வங்களும், இளைஞர்களும் சீரழிவதை எடப்பாடியார் சுட்டிக்காட்டியதை தாங்க முடியாமல் மா.சு. புலம்பி இருக்கிறார்.
தற்போதைய ஆளும் கட்சியினரால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் வியாபாரம் கொடிகட்டி பறப்பதை எடப்பாடியார் மக்கள் மத்தியில் எடுத்து வைத்த ஆத்திரத்தில், ஒரு குடும்பத்திற்கு கொத்தடிமையாக சேவகம் செய்யும் இந்த விடியா அரசின் அமைச்சர் மா.சு. ஊளையிட்டு பார்க்கிறார்.
தனது சொந்த உழைப்பினால் படிப்படியாக முன்னேறி, கிளை கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என, இன்று கழக இடைக்கால பொதுச்செயலாளராகவும் உயர்ந்தவர் எடப்பாடியார். உழைப்பு என்றால் அதற்கு என்ன விலை என்று கேட்பவர்கள் தான் தி.மு.க.வினர்.
மா.சு.வை போல் தலைமைக்கும், தலைமையின் வாரிசுகளுக்கும் முறைவாசல் வேலை செய்து பதவிகளுக்கு வந்தவரல்ல, மா.சு.வின் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினை போல் தந்தையின் மடியில் தவழ்ந்து வாரிசு அடிப்படையில் பதவிகளை பிடித்தவர் அல்ல, எடப்பாடியார்.
தன் மனைவி பெயரில் செய்த நிலமோசடி வழக்கு என்னும் கத்தி இவர் தலைக்கு மேல் தொங்குவதை மா.சு. மறந்து விட்டார் போலும். தங்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த தலைவருமான துரைமுருகன், தி.மு.க தற்போது விபச்சாரிகளின் கூடாரமாக மாறிவிட்டது.
கட்சி மாறி வருபவர்கள் விபச்சாரிகள் என்று சொன்னதை கேட்ட பின்பும், நாக்கை பிடுங்கிக்கொள்ளாமல் மா.சு. வாய் நீளம் காட்டுவது வெட்கக்கேடானது. இவருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது.
இன்றைய திமுக அரசு, வாரத்துக்கு ஒரு விருதினை பெறுவதற்கு காரணம், கடந்த 10 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலங்களில் நிறைவேற்றப்பட்ட எண்ணிலடங்காத சாதனைகளே ஆகும்.
ஆட்சி மாறிய காரணத்தினால், கடந்த ஆட்சிக்கு கிடைத்த விருதுகளை பெற்றுக்கொண்டு போட்டோ ஷூட் நடத்துபவர்கள் வேறு எப்படி பேசுவார்கள்? விதவிதமாக ஆடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி, நாடக ஆட்சி நடத்தும் விளம்பர வெறியர்களை நினைத்து மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருப்பது கூட அமைச்சருக்கு தெரியவில்லை, பாவம்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.