தி.மு.க. அரசின் அமைச்சர்கள் எகத்தாளத்துடன், தலைக்கணத்துடன் பேசுவது அநாகரீகத்தின் உச்சம்

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம்
மதுரை,
அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் உரிமையை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியாருக்கு மக்கள் வழங்கி இருக்கிறார்கள். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல் விடியாக தி.மு.க. அரசின் அமைச்சர்கள் எகத்தாளத்துடன், தலைக்கணத்துடன் பேசுவது அநாகரீகத்தில் உச்சம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாணயத்தின் இருபக்கங்களாக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும். இருக்க வேண்டும். இதில் ஒரு பக்கம் மட்டும் இருந்தால் அந்த நாணயமே செல்லாது. பேரறிஞர் அண்ணா கூறுவார் ஆளுங்கட்சி என்பது கொதிக்கும் பானை. அதை பக்குவப்படுத்தி பதம் பார்க்கும் அகப்பையாக இருப்பது தான் எதிர்க்கட்சி வேலை.
அதுபோலத்தான் ஆளுங்கட்சிகளின் குறைகளை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அரசுக்கு அறிக்கை விடுகிறார் எடப்பாடியார். ஆனால் அதற்கு அமைச்சர்கள் நாகரீகமற்ற முறையில் பேசுகின்றனர். இதற்கு அரசியல் நடுநிலையாளர்கள், ஆய்வாளர்கள் எல்லாம் ஜனநாயகம் செத்து விட்டதா என்று வேதனை அடைந்து வருகின்றனர்.
வேளாண் துறையில் உள்ள அவலங்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் சுட்டி காட்டினால், அதற்கு அமைச்சர் வார்த்தையை கொட்டுகிறார். போதைபொருள் அதிகரித்து விட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் கூறும் பொழுது, அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் கொந்தளித்து பேசியது அவர் இயலாமை காட்டுகிறது.
குறிப்பாக பள்ளி மாணவிகள் மூன்று பேர் போதை மருந்தில் தள்ளாடிய காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்தன, அதனை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் சுட்டிக்காட்டும் பொழுது கோபப்படுகிறார். இந்த நிலையை அரசு கவனிக்கவில்லையா என்று தான் தோணுகிறது. மேலும் அமைச்சர் கடந்த 10 ஆண்டுகளில் போதைபொருள் குறித்து ஒப்பிட்டு பேச முடியுமா என்று கூறுகிறார்.
தற்போது தமிழகத்தில் 38 வருவாய் மாவட்டங்கள் உள்ளன. கடந்த அம்மா ஆட்சி காலங்களில் கல்லூரிகள், பள்ளிகளில் இதுபோன்ற வேதனையான சம்பவங்கள் நடைபெற்றது உண்டா? நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள் கடந்த 10 ஆண்டுகளில் போதைப்பொருள்கள் அதிகரித்ததில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தான் அதிகரித்து உள்ளது என்பதை நீங்கள் சர்வே செய்தால் அதற்கு விடை இது தான் கிடைக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தார்மீக அடிப்படையில், நாட்டில் நடக்கும் அவலங்களை புள்ளி விபரத்துடன் சுட்டிக்காட்டும் பொழுது, அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் சுகாதாரத்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர், தொழில் துறை, உணவுதுறை அமைச்சர், நிதி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் எல்லாம் எகத்தாளம், ஏகடியம், அதிகாரத்துடன் பேசுவதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் பல்வேறு விமர்சனத்தை கடந்து தான் தமிழ்நாட்டுக்காக, தமிழக மக்களுக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டு சிறந்த தலைமையின் மொத்த வடிவமாக உள்ளார். எதிர்க்கட்சி தலைவரின் அறிக்கையை, அமைச்சர்கள் உள் வாங்கி அதற்கு அரசு தீர்வு காண வேண்டும். அமைச்சர்கள் எகத்தாளம், ஏகடியம், மமதையுடன் பேசுவதை ஜனநாயகம் மன்னிக்காது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் கூறியதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நீங்கள், மக்கள் கூறுவதை எப்படி கேட்பீர்கள். உங்கள் மீது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக எந்த குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சி தலைவர் வைக்கவில்லை, நாட்டின் நடக்கும் அவலங்களை தான் சுட்டிக்காட்டுகிறார். அதற்கு சரி செய்கிறோம் என்று கூறுங்கள். இல்லை என்றால் நாங்கள் சர்வாதிகாரியாக பேசுவோம் என்று கூட கூறுங்கள்.
எதிர்க்கட்சி தலைவரை பார்த்து அருகதை இல்லை என்று கூறுகிறீர்கள். உங்களுக்கு எப்படி அருகதை உள்ளதோ அதேபோல் மக்களின் குறைகளை சுட்டிக்காட்ட எங்களுக்கு அருகதை உள்ளது. அதை எங்களுக்கு மக்கள் வழங்கி உள்ளார்கள்.
இனி மேலாவது அமைச்சர்கள் மமதையுடன் பேசாமல் உரிய பதிலை மக்களுக்கு வழங்க வேண்டும். அதை விட்டுவிட்டு தங்களின் தவறுகளை திசைதிருப்ப கேலி, கிண்டல், தலைக்கணத்துடன் அமைச்சர்கள் பேசி வருவது அநாகரீகத்தின் உச்சமாகும்.
இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கூறினார்.