அதிகார மமதையில் நா கொழுப்பேரி பேசுவதா? அமைச்சர் மா.சுப்பிரமணியம் நாவடக்கம் தேவை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை
அரசியல் நாகரீகம் அறியாமல் அதிகார மமதையில் நா கொழுப்பேரி பிதற்றும் விடியா தி.மு.க. அரசின் அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு நாவடக்கம் தேவை என்று எச்சரித்துள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் தற்போது தமிழக மக்கள் இந்த விடியா தி.மு.க. ஆட்சியின் கைகளில் சிக்கி சீரழிந்து வருகின்றனர் என்றும் கூறி உள்ளார்.
கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்ற முறை அம்மா அவர்களின் ஆட்சியிலும், அம்மாவின் அரசிலும் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டதால், கஞ்சா உட்பட போதைப்பொருட்களின் விற்பனை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. மா.சு. அளித்த புள்ளி விவரங்களே எங்களுடைய 10 ஆண்டுகால கழக ஆட்சிக்கு சாட்சி.
தற்போதைய 14 மாத கால விடியா தி.மு.க ஆட்சியில் போதைப்பொருட்களால் தமிழகமே மூழ்கிப்போயிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. மூவாயிரம் வழக்குகள் பதிவு, நாலாயிரம் வழக்குகள் பதிவு என்று பட்டியலிடும் மா.சு. 108 பேர் கைது, 200 பேர் கைது என்று கூறுகிறார்.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருள் சார்ந்த குற்றங்கள் பெருகி வருவதையே இந்தப்புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதை ஒரு சாதனை அறிக்கையாக வழங்க இந்த விடியா அரசால் மட்டுமே முடியும்.
தி.மு.க ஆட்சி மக்களின் நல்வாழ்விற்கு, அமைதிக்கு கொள்ளி வைத்துவிட்டு வெறும்புள்ளி விவரங்களால் பதில் சொல்லி வாயை அடைத்து விடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி என்றால், மக்களுக்கு இன்னல்கள் இன்றி, சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் அடங்கி, அமைதி தவழும்.
திமுக ஆட்சியில் ரவுடியிசம் மட்டுமே நிலைக்கும் என்பது கட்சி வேறுபாடு இன்றி பொதுமக்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மையாகும். மீதி இருக்கின்ற ஆண்டுகளாவது சட்டத்தின் ஆட்சி நடத்த மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொள்ள வேண்டும்
தப்பிக்க வைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கும், ஆளும் தி.மு.க. கட்சித் தலைமைக்கும், தி.மு.க. கட்சியினருக்கும் என்ன தொடர்பு என்பதை யோக்கியர் வேஷம் கட்டும் மா.சு. விளக்குவாரா? இந்த விடியா ஆட்சியில் தினந்தோறும் நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், போதைப்பொருள் கடத்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெறுவது வாடிக்கையாக உள்ளது.
உதாரணத்திற்கு தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் வங்கியில் கொள்ளை அடித்துச்செல்லும் சம்பவமே சாட்சி. குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் தற்போது தமிழக மக்கள் இந்த விடியா தி.மு.க. ஆட்சியின் கைகளில் சிக்கி சீரழிந்து வருகின்றனர். அரசியல் நாகரீகம் அறியாமல் அதிகார மமதையில் நா கொழுப்பேரி பிதற்றும் மா.சு.-வுக்கு ஒன்றை மட்டும் நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன்.
“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு, ‘
மக்களைக்காக்கும் அறப்போரில், அறம் காத்த முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஈடுபட்டு வருகிறார். இந்த வேள்வியில் வெற்றிபெறும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களும் அணி வகுத்து நிற்பார்கள் என்பதை இந்த கும்பகர்ண ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்.
நிர்வாக திறனற்ற தி.மு.க அரசும், அதன் அமைச்சர்களும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நீண்ட அறிக்கையை கொடுப்பதற்கு பதில், மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தினால் தமிழகம் மகிழ்ச்சி அடையும். தமது திறமையின்மையை மறைக்க எதிர்க்கட்சிகளை குறை சொல்லும்,
மறைந்த கருணாநிதியின் மாடல் அரசு திருந்த, ஒரு வாய்ப்பு அளித்த மக்களை மீண்டும் வேதனையில் தள்ள வேண்டாம். எஞ்சி இருக்கும் காலத்தையாவது மக்களுக்கான ஆட்சியாக நடத்துவதே, இவர்கள் மக்களுக்கு செய்யும் உதவியாகும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.