சிறப்பு செய்திகள்

இளைஞர் சக்தி என்றும் சிறப்புடன் விளங்கச்செய்ய உறுதியேற்போம் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து

சென்னை,

சுதந்திர தினத்தை முன்னிட்டு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

இந்திய திருநாட்டின் 76-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், இளைஞர் சக்தியும், தேசிய உணர்வும், ஒருமைப்பாடும் நமது அன்னை பூமியை என்றும் இளமையுடனும் சிறப்புடனும் விளங்கச் செய்ய உறுதியேற்போம். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

தேச விடுதலைக்காக சொல்ல முடியாத் துயரைச்சுமந்து, உதிரங்களை உரமாக்கி, உயிரை துச்சமென நினைத்து தியாகம் செய்து, சுதந்திர காற்றை சுவாசிக்கச்செய்த எண்ணற்ற வீரர்களின் ஒப்பற்ற தியாகங்களை நினைவுகூர்ந்து அவர்களை போற்றி வணங்குவோம்! இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

இவ்வாறு கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கூறி உள்ளார்.

இதேபோல் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பதிவில் 76-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துகள். ஆங்கிலேயரின் அடிமை விலங்கொடிக்க இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளை இரத்தம் சிந்திய சுதந்திர போராட்ட வீரர்களை நன்றியோடு நினைவு கூர்வோம் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஏற்கனவே வெளியிட்டு இருந்த அறிக்கையில் 13-ந்தேதி முதல் 15-ந்ேததி வரை கழகத்தினரும், பொதுமக்களும் அவரவர் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

அதை ஏற்று கழகத்தினர் அனைவரும் அவரவர் வீடுகளிலும், மாவட்ட கழக செயலாளர்கள் அவரவர் மாவட்ட கழக அலுவலகங்களிலும், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களிலும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதோடு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் மாணவ̣, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள், பரிசு பொருட்களை வழங்கி கவுரவித்தனர்.