தமிழகம்

விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களை கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் புதிய தொழில் தொடங்க அரசு முயற்சிக்கும் – முதலமைச்சர் உறுதி

திருவாரூர்

விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களை கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் ஒரு புதிய தொழில் துவங்குவதற்கு அரசு முயற்சிக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப்பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பேசியதாவது:-

இந்தப் பகுதியில் புதிய தொழில் தொடங்க வேண்டுமென்று அமைச்சர் தெரிவித்தார். கொரோனா காலத்திலும், தமிழகத்தில் மட்டும் சுமார் ரூபாய் 31,000 கோடி தொழில் முதலீட்டை இந்த 5 மாதங்களில் நாம் ஈர்த்திருக்கின்றோம். இந்தியாவிலேயே, கொரோனா காலத்தில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு தான்.

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் தொழில்தான் பிரதானத் தொழிலாக இருக்கிறது. வேறு எந்தத் தொழிலும் பிரதானமாக இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். அவரது கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களை கொண்டு ஒரு புதிய தொழில் இந்த மாவட்டத்தில் துவங்குவதற்கு அரசு முயற்சிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா வகையிலும் இந்த அரசு மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறது.

டெல்டா பகுதியான இந்தப் பகுதியில், கடைமடை பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு எவ்விதத் தடையும் இல்லாமல் நீர் கிடைப்பதற்காக கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு இருக்கின்றன. பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் தேக்கி வைத்து கோடை காலத்தில் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக, திருவாரூர் மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு இருக்கின்றன.

அம்மாவின் அரசு நீர் மேலாண்மைத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அம்மாவின் அரசு பல்வேறு வகையில் திருவாரூர் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.