தற்போதைய செய்திகள்

வீடு புகுந்து பணம் கொள்ளை, பேராசிரியையிடம் செயின் பறிப்பு – மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

சேலம்,

சங்ககிரி அருகே தூங்கி கொண்டிருந்த கல்லூரி பேராசிரியையிடம் 7 சவரன் நகையை பறித்ததோடு வீட்டில் இருந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கத்தேரி ஊராட்சியிலுள்ள தனலட்சுமி பகுதியில் வசிப்பவர் ஜான்சற்குணராஜ். இவரது மனைவி சந்தானமேரி.

இவர் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இருவரும் பணிகளை முடித்துக்கொண்டு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த சந்தானமேரி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியையும் பறித்துள்ளனர்.

அப்போது கண்விழித்த பார்த்த கணவன், மனைவி இருவரும் கூச்சலிட்டுள்ளனர். இருவரின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அதற்குள் மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து தேவூர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சங்ககிரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் விரைந்து வந்த போலீசார் விரல்ரேகை நிபுணர்களை வரவழைத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடியா தி.மு.க. ஆட்சியில் அடிக்கடி இப்பகுதியில் தொடரும் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.