தற்போதைய செய்திகள்

மருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

சென்னை

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை படிப்படியாக குறைத்துவருகிறோம் என்றும் சிகிச்சை முறைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார் என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலம், சேக் மேஸ்திரி தெரு, தண்டையார்பேட்டை மண்டலம், வியாசர்பாடி, எம்.பி.எம். தெரு மற்றும் தேனாம்பேட்டை மண்டலம், மயிலாப்பூர், கச்சேரி சாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை துவக்கி வைத்து பேசியதாவது.

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற ரூபாய் 2 லட்சமாக இருந்ததை 5 லட்சமாக உயர்த்திய அரசும் அம்மாவின் அரசுதான். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தேசிய அளவில் 6வது முறையாக முதலிடம் பெற்று, தேசிய விருதைப் பெற்றதும் அம்மாவின் அரசுதான்.

பாரதப் பிரதமர் கொரோனா தடுப்பு குறித்து காணொலிக் காட்சி மூலம் இந்தியா முழுவதுமுள்ள முதலமைச்சர்களுடைய கூட்டத்தைக் கூட்டி, ஒவ்வொரு மாநிலத்திலும், கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த எந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள், எந்த அளவுக்கு தொற்று குறைந்திருக்கின்றது போன்ற செய்தியை கேட்டறிந்தார்கள். அப்போது பாரதப் பிரதமர் , இன்றைக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் அதிகமாக எடுக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று குறிப்பிட்டார். அதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து கொண்டிருக்கிறது, அதற்காக தமிழ்நாடு அரசை பாராட்டுகின்றேன் என்று பாராட்டுச் சான்றிதழும் கொடுத்தார்.

அதுமட்டுமல்ல, அவர்கள் காணொலிக் காட்சி மூலம் பேசுகின்றபோது, தமிழ்நாட்டைப் பின்பற்றி மற்ற மாநிலங்கள் செயல்பட வேண்டுமென்ற செய்தியையும் குறிப்பிட்டார்கள். அந்த அளவுக்கு அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது, அந்த முயற்சி நல்ல பலனைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தற்போது படிப்படியாக குறைந்து பாரதப் பிரதமருடைய பாராட்டை நாம் பெற்றிருக்கின்றோம்.

அதற்காக பாடுபட்ட நம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, அவர்களுக்கு உறுதுணையாக நின்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.