தற்போதைய செய்திகள்

செப்டம்பர் 2-ம்தேதி திருவள்ளூர் மாவட்டம் வரும்முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்க வேண்டும் – கழகத்தினருக்கு, அமைச்சர் பா.பென்ஜமின் வேண்டுகோள்

திருவள்ளூர்

செப்டம்பர் 2-ம்தேதி திருவள்ளூர் மாவட்டம் வரும் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளுக்கு, அமைச்சர் பா.பென்ஜமின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக புதிய அலுவலகத்தை திறந்து வைத்து கழக நிர்வாகிகளுடன் ஊரகத்தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் பா.பென்ஜமின், கழக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ.ஹரி, திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரையும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

வருகின்ற செப்டம்பர் 2-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் தமிழக முதல்வரை உற்சாகமாக வரவேற்க வேண்டும். மாவட்டம் முழுவதும் சுவரொட்டி மற்றும் சுவர் விளம்பரங்கள் மூலம் வரவேற்பும், சமூக விலகலை கடைபிடித்தும் செயல்பட வேண்டும். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு அதிகளவில் உறுப்பினர்களை சேர்த்து வருகிற 2021-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெற அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தியதோடு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், வளர்ச்சிப் பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்து வருகிறார்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற செப்டம்பர் மாதம் 2-ந்தேதி காலை முதலமைச்சர் வருகை தர இருப்பதால் கழக நிர்வாகிகள் அனைவரும் உற்சாகமாக வரவேற்பு அளிக்க வேண்டும். சென்னையில் தொடங்கி திருவள்ளூர் மாவட்டம் வரை சுவரொட்டி மற்றும் விளம்பரம் மூலம் வரவேற்பை தெரிவித்தும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி சமூக விலகலை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் வந்து வரவேற்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்தார்.