தற்போதைய செய்திகள்

தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அரசின் சார்பில் மனமார்ந்த நன்றி- முதலமைச்சர் பேச்சு

திருவாரூர்

இந்த சோதனையான காலத்தில் தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை அரசின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

கொரோனா வைரஸ் நோய் தொற்று எளிதாக பரவக்கூடியதாக உள்ளதால் இதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்று அனைத்து ஆய்வுக் கூட்டங்களிலும் செய்தியாளர்களைச் சந்திக்கின்றபோதும் நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உலகளவில் பரவி, தமிழகத்திலும் பரவியுள்ளது. இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முனைப்போடு எடுத்து வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தாலும், மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நேரத்தில் தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர் களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை அரசின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, கூட்டுறவுத் துறை, உணவுத் துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த அலுவலர்களும் அவர்களுக்கு துணையாக நின்று இந்தநோய் தொற்றுப் பரவலைத் தடுக்க உதவி வருகிறார்கள்.

இந்தப் பணிகளில் ஈடுபட்ட பல அரசு அலுவலர்கள் தன்னலம் பாராமல், அர்ப்பணிப்பு உணர்வோடு, சேவை மனப்பான்மையோடு, உயர்ந்த எண்ணத்தோடு தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட காரணத்தினால் எதிர்பாரதவிதமாக தொற்று ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.