தற்போதைய செய்திகள்

விரகனூர் அணை, பூங்காவை பராமரிக்க வேண்டும்-அரசுக்கு, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மதுரை

விரகனூர் அணை, பூங்காவை மராமத்து செய்து பராமரிக்க வேண்டும் என்று அரசுக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வலியுறுத்தி உள்ளார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நிலக்கோட்டை அருகே உள்ள பேரணை தடுப்பணைக்கும், பார்த்திபனூர் மதகு அணைக்கும் இடையே வைகை ஆற்றின் குறுக்கே விரகனூரில் மதகு அணை கட்டப்பட்டுள்ளது. இது திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ளது. இந்த அணை விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாகவும், மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

அணைக்கட்டின் வளாகத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பூங்காக்கள் உள்ளது. இந்த பூங்காவில் வானுயர்ந்த மரங்கள், செயற்கை நீரூற்று, விளையாட்டு சாதனங்கள், சிமெண்ட் இருக்கைகள் இதன் நுழைவு வாயிலில் அனைவரும் கண் கவரும் வண்ணம் செங்கற்களால் வடிவமைக்கப்பட்ட யானை சிலை உள்ளது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுலாத்தலமாகவும், ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சுற்றுலா தலமாகவும், விடுமுறை நாட்களில் மதுரை மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாகவும் இருந்து வருகிறது.


மேலும் அணையின் பக்குவாட்டு பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து வருவதால், நீர் மாசுபட்டு வருகிறது, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மதகு அணை பராமரிப்பு குறைந்து வருகிறது, அதனால் சேதமும் அடைந்து வருகிறது

ஆகவே இந்த விரகனுர் மதகு அணையை குடிமராமத்து செய்தும், 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள பூங்காவையும் பராமரிக்க வேண்டும் என்று, தமிழக அரசை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பகுதி கழக துணை செயலாளர் செல்வகுமார் உட்பட பலர் இருந்தனர்.