தற்போதைய செய்திகள்

தெளிவான நிலைப்பாடு இல்லாத ஓ.பன்னீர்செல்வம் -முன்னாள் எம்.எல்.ஏ. இரா.மணிமாறன் கடும் தாக்கு

திருவள்ளூர்,

குடும்பத்தினரின் பதவிக்காக அரசியல் நடத்தி வரும் ஓ.பன்னீரெ்சல்வம் தெளிவான நிலைப்பாடு இல்லாதவர் என்றும் அவரை கழகத்தினர் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.மணிமாறன் கூறி உள்ளார்.

இதுகுறித்து பூந்தமல்லி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான இரா.மணிமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களின் ஏகோபித்த குரலாக எடப்பாடியார் ஒற்றைத்தலைமை வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தீயசக்தி ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுடன் கைகோர்த்துக்கொண்டு கழக தொண்டர்களின் கோவிலாக விளங்கும் தலைமைக்கழக அலுவலகத்தை குண்டர்கள் படையுடன் வந்து பூட்டை உடைத்து அம்மாவின் அறையை காலால் எட்டி உதைத்து உள்ளே இருந்த செங்கோல், கணினி, சேர், டேபிள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கிய ஓ.பன்னீர்செல்வத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆன்மாவும், புரட்சித்தலைவி அம்மாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது. அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களையும் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்கள் ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள்.

பதவிக்காக தர்மயுத்தம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம். தற்போது அவரது குடும்பத்தினரின் பதவிக்காக மட்டுமே அரசியல் செய்து வருகிறார். அம்மாவின் மறைவிற்குப்பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த பொழுது சசிகலா முதல்வர் பதவியை பறித்தார். பின்னர் தி.மு.க.வுடன் கைகோர்த்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் கழகத்திற்கு எதிராக வாக்களித்தார்.

எடப்பாடியார் முதல்வராக ஆன பிறகு அவர் எடுத்த முயற்சியினால் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் மீண்டும் இணைக்கப்பட்டார். அவர் துணை முதல்வர் பதவியையும், ஒருங்கிணைப்பாளர் பதவியையும் கேட்டு பெற்றுக் கொண்டார். ஆனால் அவர் பதவியை பெற்றுக்கொண்டு தீய சக்தி திமுகவுக்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் திமுகவின் கைக்கூலியாக மவுனம் காத்து வந்தார். கழகத்தில் கொள்கை முடிவுகள் எடுக்கும் பொழுது அவர் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் தனக்கு மட்டும் பதவி கிடைத்தால் போதும் என்று அமைதி காப்பார்.

ஒரு கட்சியின் தலைவராக இருந்தால் அவர் அனைத்து தொகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஒரு சில சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் பிரச்சாரம் செய்து விட்டு தனது தொகுதியை மட்டுமே அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இவரெல்லாம் எப்படி கட்சியின் தலைவராக இருக்க முடியும்.

கழகம் தோற்றத்திற்கு காரணமே ஓ.பன்னீர்செல்வம் தான். காரணம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் அந்த தொகுதியில் செல்வாக்கு மிக்க வேட்பாளரா அவர் மக்களின் அன்பை பெற்றவரா கழகத்தின் சார்பில் தொகுதியில் போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவாரா என்று பார்க்க வேண்டும். ஆனால் அவர் அப்படி பார்க்காமல் அவருடைய ஆதரவாளர்களா என்று பார்த்து வேட்பாளரை தேர்வு செய்வதும், ஒரு சில தொகுதிகளில் கழகம் தான் வெற்றி பெறும் என்று மாவட்ட செயலாளர்கள் எடுத்துக்கூறியும் இல்லை, இல்லை அந்த தொகுதியில் கூட்டணி கட்சியினர் வற்புறுத்தி கேட்கிறார்கள். அவர்களுக்கு கொடுத்து விடலாம் என்று கூட்டணிக்காக அவர் ஒதுக்கி கொடுத்ததால் இன்று ஆட்சியை இழந்து நிற்கின்றோம்.

இதற்கு முழுக்க முழுக்க ஓபிஎஸ் தான் காரணம். ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓராண்டிற்கு மேலாக இருந்துள்ளார். இதுவரை திமுகவை எதிர்த்து ஒரு குரல் கொடுத்து இருப்பாரா, இதுவரையிலும் ஒரு கண்டனம் கூட தெரிவித்தது கிடையாது. இவர் எல்லாம் தலைமை பொறுப்புக்கு ஏற்ற தலைவரா?

சசிகலா, அம்மாவுக்கு பணிவிடை செய்பவர் என்றும், தினகரன் ஒரு மாயமான் என்றும் போர் டுவண்டி என்றும் கடுமையான சொற்களால் கடந்த ஐந்து ஆண்டுகளாக சசிகலாவையும், தினகரனையும் வார்த்தைகளால் வசைப்பாடி பேசிய ஓ.பன்னீர்செல்வம் இப்போது அவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

அரசியலில் தெளிவான நிலைப்பாடு இல்லாத ஓ.பன்னீர்செல்வத்துடன் கழக தொண்டர்கள் யாரும் இணைந்து செயல்பட மாட்டார்கள். இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால் கழக தொண்டர்கள் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட கழக இணை செயலாளர் நர்மதா ராஜசேகர், ஒன்றிய பொருளாளர் சரவணன், மாவட்ட பிரதிநிதி உஷா குணசேகரன், நசரத்பேட்டை கிளை செயலாளர் ராஜரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.