தற்போதைய செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர், ஒண்ணுபுரம் கிராமங்களில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் நலன்கருதி ஆரணி வட்டம் தச்சூர், ஒண்ணுபுரம், செய்யார் வட்டத்தில் தவசிமேடு, வெம்மபாக்கம் வட்டத்தில் தூசி, போளூர் வட்டத்தில் 99 புதுப்பாளையம், திருவண்ணாமலை வட்டத்தில் பூதமங்கலம், சேத்பட் வட்டத்தில் நெடுங்குணம், வந்தவாசி வட்டத்தில் மழையூர், செங்கம் வட்டத்தில் காஞ்சி, மற்றும் கலசப்பாக்கம் வட்டத்தில் எலத்தூர் ஆகிய 12 இடங்களில் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்து கடந்த ஆகஸ்ட் 18ம்தேதி முதல் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

நேற்றுமுன்தினம் ஆரணி அடுத்த தச்சூர், ஒண்ணுபுரம் ஆகிய இரண்டு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தலைமை தாங்கினார். செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகள் தங்கள் நெல்லை அறுவடை செய்து தங்களின் சொந்த இடத்தில் காயவைத்த 17 சதவீத ஈரப்பதத்துடன் பாதுகாத்து அரசின் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து கொள்ளலாம், சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1835 ரூபாய் முதல் 1865 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து பெற்றுக்கொள்வார்கள்.மேலும் கடந்த 18ம்தேதி முதல் திறக்கப்பட்ட 10 கொள்முதல் நிலையங்கள் மூலம் 112 விவசாயிகளிடமிருந்து 320 மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஆரணி ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் க.சங்கர், பிஆர்ஜி.சேகர், ஜி.வி.கஜேந்திரன் ப.திருமால், மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராசன், பூங்கொடி திருமால், தச்சூர் நிர்மல்குமார், முன்னாள் தலைவர் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.