சிறப்பு செய்திகள்

நீர் வேளாண்மைத் திட்டத்தின் மூலம் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் தடுக்க நடவடிக்கை – முதலமைச்சர் பேட்டி

சென்னை

நீர் வேளாண்மைத் திட்டத்தின் மூலம் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த்தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூபாய் 223.97 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, அதில் இம்மாவட்டத்தில் ரூபாய் 23.57 கோடி மதிப்பீட்டிலான 7 பணிகள் துவங்கப்பட்டு ரூபாய் 13.56 கோடி மதிப்பீட்டில் 5 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 பணிகள் நடைபெற்று வருகின்றன. காவேரி மற்றும் வெண்ணாறு ஆற்றில் நிலத்தடி நீர் செறிவூட்டும் 155 ஆழ்துளை கிணறுகள் மற்றும் ஏரிகளில் 26 நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டுமானங்கள் அமைக்கும் பணி ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

வலங்கைமான் வட்டம், ஊத்துக்காடு கிராமம், வெட்டாறு ஊத்துக்காடு நீரொழுங்கியை புனரமைக்கும் பணி ரூபாய் 2.91 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. வலங்கைமான் வட்டம், கண்டியூர் கிராமம் வெட்டாற்றின் குறுக்கே செல்லூர் அணைக்கட்டு புனரமைக்கும் பணி ரூபாய் 1.36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. திருவாரூர், திருக்கண்ணமங்கை வாய்க்காலில் உள்ள கட்டுமானங்களை ரூபாய் 2.80 கோடி மதிப்பீட்டில் சீரமைத்தல் மற்றும் கரைகளை பலப்படுத்தி புனரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி வட்டம், ஒவரூர் வடிகாலின் குறுக்கே ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் விளாங்காடு இறவை பாசனத்திட்டப் பகுதிக்கு நீர் வழங்கும் பணிக்கான மதிப்பீடு அரசின் பரிசீலனையில் உள்ளது. இன்னும் பல திட்டங்களை அம்மாவின் அரசு அறிவித்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நீடாமங்கலம் ஒன்றியத்தில் 3 ஏரிகள் மற்றும் மன்னார்குடி ஒன்றியத்தில் 3 ஏரிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. நீடாமங்கலம் ஒன்றியம், காவேரி டெல்டா பகுதியில் காவேரி உபவடி நிலத்தில் மன்னார்குடி பிரதான வாய்க்கால் 15 தலைப்பு மதகுகள் புனரமைத்து நவீனப்படுத்தும் பணி மற்றும் மன்னார்குடி பிரதான வாய்க்கால் 24 தலைப்பு மதகுகள் புனரமைத்து நவீனப்படுத்தும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

நீர் வேளாண்மைத் திட்டத்தின் மூலமாக ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் தடுப்பதற்காக அம்மாவின் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதேபோல, கடல் நீர் உட்புகாத வண்ணம் நீரொழுங்கிகள் அமைக்கக்கூடிய திட்டத்தையும் அம்மாவின் அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.