சிறப்பு செய்திகள்

வயலில் களை பறித்துக்கொண்டிருந்த பெண்களிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்

சென்னை

திருவாரூர் மாவட்டம், கோவில்வென்னி ஆதானூர் கிராமத்தில் வயலில் களை பறித்து கொண்டிருந்த பெண்களிடம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நலம் விசாரித்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் நிவாரண உதவிகள் அனைத்தும் முழுமையாக கிடைத்துள்ளதாக நன்றி தெரிவித்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திருவாரூரிலிருந்து கார் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருவாரூர் மாவட்டம், கோவில்வென்னி ஆதனூர் கிராமம் என்ற இடத்தில் வயலில் பெண்கள் 15 பேர் களை பறித்துக்கொண்டிருந்ததை கண்டதும் முதலமைச்சர் திடீரென காரை நிறுத்தச்சொல்லி இறங்கினார். பின்னர் சாலையில் இருந்து வயல் பகுதிக்கு அந்த பெண்களை நோக்கி நடந்தே சென்றார்.

ஆஹா முதலமைச்சரே நம்மை சந்தித்து பேச வருகிறாரே என்று மகிழ்ச்சியடைந்த பெண்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை கண்டதும் கைகூப்பி வணங்கினர். பதிலுக்கு முதலமைச்சரும் அவர்களுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். அந்த நேரத்தில் அந்த பெண்கள் முக கவசம் அணியாமல் இருந்ததை முதலமைச்சர் கண்டார். முக கவசம் அணியாமலா வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூறிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது காரில் வைத்திருந்த முக கவசங்களை எடுத்து வரச்சொல்லி அதனை அந்த பெண்களிடம் வழங்கி அணியச் சொன்னார்.

அப்போது முதலமைச்சர், அந்த பெண்களிடம் அரசு மூலமாக அறிவிக்கப்பட்ட அனைத்து நிவாரண உதவிகளும் தங்களுக்கு கிடைத்துள்ளதா, கடந்த ஐந்து மாதங்களாக விலையில்லாமல் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது கிடைக்கப்பெற்றதா என்றும் கேட்டறிந்தார். மேலும் வயலில் வேலை செய்யும் உங்களுக்கு நியாயமான கூலி கிடைக்கிறதா, அனைத்து நாட்களும் நீங்கள் விவசாய வேலைக்கு செல்கிறீர்களா என்று மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்தார்.

அதற்கு எங்களை போன்ற கூலி தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் மற்றும் விலையில்லாமல் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்களை வழங்கியதற்கு நாங்கள் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அம்மா எங்களை போன்ற ஏழை கூலித்தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதை போன்று தாங்களும் எங்களை போன்ற ஏழைகள் மீது அக்கறை கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருவதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த பெண்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தான் முதலமைச்சர் மட்டுமே என்று எண்ணாமல் ஒரு விவசாயியாகவும் மனதில் கொண்டு களை பறித்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து சாதாரணமாக பேசி அவர்களிடம் நலம் விசாரித்து அவர்களின் நிலைமைகளை கேட்டறிந்த விதம் முதலமைச்சரின் எளிமையான செயல்பாடுகளை விவசாய வேலை செய்யும் பெண்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.