சிறப்பு செய்திகள்

எங்கள் கூட்டணியை பொறுத்தவரைக்கும் கழகம் தான் தலைமை வகிக்கும் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி-விவசாயத்திற்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்படுமா..

பதில்-அதுக்கு தான் வேளாண்மைத்துறை இருக்கிறதே. ஒவ்வொரு துறைக்கும் தனி பட்ஜெட் அறிவிக்க முடியாது. மானியக் கோரிக்கையில் அந்தந்த அமைச்சர்கள் எந்தெந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளையும் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். அது எல்லா மாநிலங்களிலும் அப்படி தான் இருக்கிறது.

கேள்வி-சம்பா சாகுபடி நடந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் நமக்கு மேட்டூரில் 2 மாதங்களுக்கு தான் இருக்கிறது. அக்டோபர் – நவம்பர் – டிசம்பர் மாதங்களில் பருவமழை பொய்கின்ற காலத்தில் மேட்டூரில் போதிய தண்ணீர் இருப்பு வைப்பதற்கு…

பதில்-கற்பனையான கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. எல்லோரும் மழை பொழியும் என்று எதிர்பார்க்கிறோம். நமக்கு கிடைக்க வேண்டிய பங்குநீர் கிடைப்பதற்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு கொடுத்திருக்கிறது. நாம் கடுமையாக முயற்சி எடுத்து கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் காவேரி மேலாண்மை ஆணையம் கூட்டப்படுகிறது. அங்கே நம்முடைய கருத்துகளை எடுத்து சொல்கின்றோம். நமக்கு எவ்வளவு நீர் தேவைப்படும் என்ற விவரங்களை தெரிவிக்கிறோம். ஒவ்வொரு மாதத்திற்கு எவ்வளவு நீர் கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. அதன்படி நாம் கேட்டு பெற்றுக் கொண்டு இருக்கிறோம்.

கேள்வி-வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து…

பதில்-புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சரி, சட்டமன்ற தேர்தல் வந்தாலும் சரி, நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் சரி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தான் தேர்தலை சந்தித்திருக்கிறோம். அந்த நிலைப்பாடு தான் தொடரும்.

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தான் தேர்தல் நடந்திருக்கிறது. ஆகவே எந்த தேர்தல் வந்தாலும் எங்கள் கூட்டணியை பொறுத்தவரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தலைமை வகிக்கும்.

கேள்வி-தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் கொள்கை குறித்து…

பதில்-இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம். இயற்கை வேளாண் கொள்கை தொடர்பாக அரசினுடைய பரிசீலனையில் இருக்கிறது.

கேள்வி-மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்கள் இந்த கொரோனா காலத்திலும் கடன் பெற்றவர்களிடம் கட்டாய பண வசூல் செய்கிறார்களே….

பதில்-இப்படிப்பட்ட புகார் அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் அரசு அதற்குண்டான நடவடிக்கையை எடுக்கும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.