தற்போதைய செய்திகள்

எட்டாக்கனியாக இருந்த மருத்துவ படிப்பு நிலையை மாற்றியுள்ளோம் – முதலமைச்சர் பேச்சு

சென்னை

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி எட்டாக்கனியாக இருந்த மருத்துவப் படிப்பு நிலையை மாற்றியுள்ளோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலம், சேக் மேஸ்திரி தெரு, தண்டையார்பேட்டை மண்டலம், வியாசர்பாடி, எம்.பி.எம். தெரு மற்றும் தேனாம்பேட்டை மண்டலம், மயிலாப்பூர், கச்சேரி சாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை துவக்கி வைத்து பேசியதாவது.

2011ஆம் ஆண்டில் அம்மா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்கின்ற வரை, 1,945 மருத்துவ இடங்கள்தான் இருந்தன. அம்மா அவர்கள் 2016 வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், 3,060 இடங்களாக உயர்த்தினார்கள். அம்மாவின் அரசு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகளை உருவாக்கியதன் மூலமாக 1,650 புதிய இடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, இப்போது 5,300 நபர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்கக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கின்றோம்.

அரசு பள்ளியில் படித்த ஏழை எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிப்பதற்கு உள்ஒதுக்கீடுடாக 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கிய அரசு அம்மாவின் அரசு. ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியரும், மருத்துவப் படிப்பு படிப்பது என்பது ஒரு எட்டாக்கனியாக இருந்த நிலை மாறி, அந்த ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியரும் மருத்துவப் படிப்பு படிக்கின்ற சூழ்நிலை எங்களுடைய அரசு உருவாக்கித் தந்திருக்கின்றது. நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு 313 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்துள்ளது.

அரசுப் பள்ளியிலே படிக்கின்ற 41 சதவீதம் மாணவ, மாணவியர்களில், கடந்த ஆண்டு 6 நபர்களுக்குத்தான் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்த, அந்த நிலை மாறி, அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, 313 நபர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைத்ததென்று சொன்னால், இது ஒரு வரலாற்றுச் சாதனை என்பதை நினைவுகூற கடமைப்பட்டிருக்கின்றேன். அதுமட்டுமல்ல, இவர்களுக்கு மருத்துவக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளதால் அவர்களுக்கு உதவி செய்கின்ற வகையில் 16 கோடி ரூபாய் சுழல் நிதி ஏற்படுத்தி அந்தக் கட்டணத்தையும் அம்மாவின் அரசு செலுத்துகின்றது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.