பெரம்பலூர்

வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள 2500 கொரோனா தடுப்பு பெட்டகம் – சுகாதாரத்துறையிடம் பெரம்பலூர் ஆட்சியர் வழங்கினார்

பெரம்பலூர்

கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் சிகிச்சை மேற்கொள்வதற்குத் தேவையான ‘‘கொரோனா தொற்று தடுப்பு பெட்டகத்தினை’’ சுகாதார துறையினரிடம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு வழங்குவதற்காக 2500 கொரோனா தொற்று தடுப்பு பெட்டகத்தினை நேற்று சுகாதார துறையினரிடம் வழங்கினார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-

முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் தடுத்திடவும், நோய்த்தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்திடவும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பினை கண்டறிந்திட 28 அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 3 வட்டார அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் 12 நடமாடும் மருத்துவ வாகனத்தின் மூலம் நடத்தப்படும் மருத்துவ முகாம்கள் ஆகிய இடங்களில் நோய்த்தொற்று கண்டறியும் மையமும் மூலம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தலைமை மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், மேலும் பிற நோய்தொற்றினால் தொந்தரவு இல்லாத கொரோனா வைரஸ் பாதித்தவர்களை சித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் குணப்படுத்திட அரசு வழிகாட்டுதலின்படி சித்தா சிறப்பு மையம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டு தமிழக அரசு சிறப்பு சிகிச்சைக்கான மருந்து பெட்டங்கங்களை வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2500 கொரோனா தொற்று தடுப்பு பெட்டகத்தினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வழங்கியுள்ளது. இப்பெட்டகம் அரசு மருத்துவமனை மற்றும் பிற சோதனைகளின் வாயிலாக கொரோனா வைரஸ் தொற்று நோய் கண்டறியப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள விரும்பும் நபர்களுக்கு சுகாதார துறையின் மூலம் வழங்கப்பட உள்ளது.

இப்பெட்டகத்தில் கபசர குடிநீர் 50 கிராம் அளவில் 3 பொட்டலங்கள், முககவசம் 15, மல்டி விட்டமின் மாத்திரைகள் 30, ஜிங்க் சல்பேட் மாத்திரைகள் 30, கை கழுவும் சோப்பு கட்டி (35 கிராம்)3, கிருமி நாசினி 100 மில்லி அளவில் 1 ஆகியவை அடங்கியுள்ளன. இதனை முறையாக பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கீதாராணி, மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.