தமிழகம்

வழிபாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

வழிபாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாகஅனைத்து வழிபாட்டு தலங்களும் பூட்டப்பட்டு பக்தர்கள் வழிபடத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று (செப் 1ம்தேதி) முதல் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிபாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

பக்தர்கள் தங்களின் காலணிகளை, ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அவர்களே வைத்து மீண்டும் எடுத்துச் செல்ல வேண்டும். கோயில்களில் மேற்கொள்ளப்படும் உடல் வெப்ப சோதனைக்கு பக்தர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். உடல்நிலை சீரற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது கைகளை சுத்தம்செய்வதுடன், பக்தர்கள் தங்களது கால்களை நன்கு கழுவ வேண்டும்.

கோயிலுக்குள் நடக்கும் திருமுழுக்குகள் மற்றும் போற்றுதல்களில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோயில்களில் பிரசாதங்கள் வழங்க அனுமதியில்லை. காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் உரிய இடைவெளியுடன் செலுத்த வேண்டும். பக்தர்கள் கோயில்களில் விழுந்து வணங்குவதற்கோ, அமருவதற்கோஅனுமதி கிடையாது.

இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.