ராமநாதபுரம்

4 தொகுதிகளையும் கைப்பற்றி வெற்றிவாகை சூடுவோம் – மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி சூளுரை

ராமநாதபுரம்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கழகத்தின் நான்கு தூண்களின் துணையோடு மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதி வெற்றிகளையும் கைப்பற்றி கழகத்திற்கு வெற்றி வாகை சூடுவோம் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி சூளுரைத்தார்.

ராமநாதபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தேவேந்திர நகர், பெரியார் நகர், காவனூர், கூரியூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் திமுக, விசிக, புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த இளைஞர்கள். இளைஞர் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த நிர்வாகி பிரதீப் சக்கரவர்த்தி ஏற்பாட்டின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் கழகத்தில் இணைந்தனர்.

கழகத்தில் இணைந்த இளைஞர்கள் அனைவருக்கும் கழக வேட்டியை அணிவித்து மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி வரவேற்றார்.இந்நிகழ்ச்சியின் போது கழக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் சாமிநாதன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் நாகராஜன், வேந்தோணி, ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது:- 

இலை ஆட்சி தொடர வேண்டும் என்பதே அனைவரும் விருப்பமாகும். குறிப்பாக இளைஞர்களுக்கான இயக்கமாக இந்த ஈரிலை இயக்கம் உள்ளது. கழகத்தில் இணையும் இளைஞர்கள் அனைவருக்கும் நல்ல எதிர் காலம் உண்டு. இந்தியாவிலேயே இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பினை உருவாக்கி தந்தது நமது கழகம். மாணவச்செல்வங்களுக்கு மடிக்கணினிகளை தந்தது நமது கழகம்.

பதினான்கு வகை உபகரணங்களை பள்ளி மாணவர்களுக்கு தந்துதவியது இந்த கழகம். தாலிக்கு தங்கம் தந்து, உதவித்தொகையும் தந்து தாயுள்ளத்தோடு உதவிய கழகம் நமது இயக்கம். திமுக ஆட்சியில் நடந்தது போல தற்போது தமிழகத்தில் சாதி சண்டை மத சண்டை கிடையாது. காவல் நிலையத்தில் கட்ட பஞ்சாயத்து கிடையாது. கந்துவட்டி பிரச்சனை கிடையாது.

தற்போது ஆட்சி நடத்தி வரும் முதல்வரால் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. மாணவர்களுக்கும்,மீனவர்களுக்கும் உறுதுணையாக இருக்கிறார் நமது முதல்வர். எந்த நேரத்திலும் சந்திக்ககூடிய ஒரு சாமானிய முதல்வரை பெற்றுள்ளது நமது தமிழகம். ஒருதலைபட்சமாக அரசியல் செய்யும் ஸ்டாலின் இனி ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது. மத நல்லிணக்கம் பற்றி முழுமையாக தெரியாத ஸ்டாலினுக்கு இனி இறங்குமுகம் தான்.

எதிர் கட்சித்தலைவருக்கான தகுதி ஸ்டாலினுக்கு துளி அளவு கூட கிடையாது. விரைவில் திமுகவில் உள்ள இளைஞர்களும், முக்கிய பொறுப்பாளர்களும் கழகத்தில் இணைய உள்ளார்கள். நாட்டை நல்வழிப்படுத்தி கொண்டிருக்கும் கழகத்திற்கு அனைவரும் வர வேண்டும். எதிர் கால இந்தியா இளைஞர்கள் கையில் என சுவாமி விவேகானந்தர் கூறியது போல வருங்கால இயக்கத்தை வழிநடத்த இளைஞர்கள் படை கழகத்தில் தொடர்ந்து வர வேண்டும்.

இளைய சமுதாயம் அனைவரும் இலையின் சமுதாயமாக உருமாற வேண்டும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா, இளைஞர் திலகம் இ.பி.எஸ். மாணவர் திலகம் ஓ.பி.எஸ் உள்ளிட்ட கழகத்தின் நான்கு தூண்களின் துணையோடு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளின் வெற்றிகளையும் கைப்பற்றி நமது ஒருங்கிணைப்பாளர்களிடம் சமர்ப்பித்து கழகத்திற்கு வெற்றி வாகை சூடுவோம்.

இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.