சேலம்

தாமதமாக வந்த தி.மு.க. எம்.எல்.ஏ-வெயிலில் மயங்கி விழுந்த மாணவிகள் -சேலத்தில் நடந்த அரசு விழாவில் பரபரப்பு

சேலம்,

அரசு விழாவிற்கு தி.மு.க. எம்.எல்.ஏ தாமதமாக வந்தார். அவரது வருகைக்காக காக்க வைக்கப்பட்டதால் வெயிலை தாங்க முடியாமல் மாணவிகள் மயங்கி விழுந்தனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாநகராட்சி கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக காலை 9 மணி முதல் மாணவிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவதற்காக சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளருமான ராஜேந்திரன் வருகைக்காக காத்திருந்தனர்.

2 மணி நேரம் ஆகியும் சட்டமன்ற உறுப்பினர் வரவில்லை, இதனால் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் ஒரு சில மாணவிகள் மயங்கி விழுந்தனர். மேலும் கொளுத்தும் வெயிலிலும் மாணவிகள் தரையில் அமர வைக்கப்பட்டு வெகுநேரம் காத்திருந்தனர்.

அதன் பிறகு 11 மணி அளவில் சட்டமன்ற உறுப்பினர் வந்து மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். சட்டமன்ற உறுப்பினருக்காக அரசு பள்ளி மாணவிகள் 2 மணி நேரம் காத்திருந்த அவலம் சேலத்தில் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.