தற்போதைய செய்திகள்

திறமையானவர்களை கண்டெடுத்துமுழுமையாக பயன்படுத்திக்கொண்ட ஒரே இயக்கம் கழகம் மட்டுமே – எஸ்.டி.கே ஜக்கையன் எம்.எல்.ஏ பேச்சு

தேனி

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வடக்கு ஒன்றியத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஆலோசனை கூட்டம் பண்ணைபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினார். உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் கதிரேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் அழகுராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேவாரம் பேரூர் செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை வழங்கினார்.
இதில் பேசிய மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், கடந்த 2009-ம் ஆண்டு கழகம் எதிர்கட்சியாக இருந்தது. அப்போது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகத்தில் புது ரத்தம் பாய்ச்சும் விதமாக புதிய சார்பு அணியாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை உருவாக்கினார்.

மண்டலம் வாரியாக கூட்டம் நடத்தினார். தேனி, திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கழக ஒருங்கிணைப்பாளரின் வழிகாட்டுதல் மற்றும் சிறப்பான பணியால் அதிக எண்ணிக்கையில் பாசறையில் உறுப்பினர்கள் சேர்ந்தனர். 2011, 2016 சட்டமன்ற தேர்தலில் கழகம் மகத்தான வெற்றிபெற்றது. இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக கழகம்உருவெடுத்தது. பொறுப்பு என்பது சாதாரண விஷயமில்லை. புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெற வேண்டும் என்றார்.

பின்னர் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன் பேசியதாவது-

1972-ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கழகத்தை தோற்றுவித்தார். 1975ல் திண்டுக்கல் இடைத்தேர்தல் முதல் இன்று வரை கழகம் பல மகத்தான வெற்றிகளை பெற்றுள்ளது. புரட்சித்தலைவர் 1975ல் அண்ணா தொழிற்சங்கத்தையும், 1981ல் இளைஞரணியையும் உருவாக்கினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை உள்ளிட்ட மற்ற சார்பு அணிகளை உருவாக்கினார்.

2009ல் துவக்கப்பட்ட பாசறை அணியின் திருநெல்வேலி மாநகர் பொறுப்பாளராக சிறப்பாக பணியாற்றியதற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னை பாராட்டினார். எல்லோருடைய திறமையையும் வெளிக்கொண்டு வந்து அவர்களை பயன்படுத்திக் கொண்ட ஒரே கழகம் நமது கழகம் மட்டுமே. நமது கழகத்தில் உண்மையாக உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கழகத்தை வெற்றிபெற வைக்கும் மிகப் பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் பண்ணைப்புரம் பேரூர் செயலாளர் பது என்ற லோகநாதன் நன்றி கூறினார். முன்னதாக பாசறை ஒன்றிய செயலாளர் வினோத்குமார் உள்ளிட்ட பாசறை நிர்வாகிகளிடம் உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டது.  இக்கூட்டத்தில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் அல்லிதேவிமாயழகு, தேவாரம் பேரூர் துணை செயலாளர் எஸ்.எம்.செல்வம், ரெங்கநாதபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமலைராஜ், மறவபட்டி முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.