தற்போதைய செய்திகள்

இனிவரும் தேர்தலில் எடப்பாடியார் வெற்றிபெற்று புரட்சித்தலைவி அம்மாவின் அரசை அமைப்பார்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

ராமநாதபுரம்,

குறைகுடம் தழும்பியது போல் ஓபிஎஸ்சுக்கு ஆதரவு இருப்பதாக மாயத்தோற்றத்தை உருவாக்கி குரல் எழுப்புவதை கண்டு மக்கள் முகம் சுளிக்கிறார்கள் என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருகின்ற தேர்தலில் எடப்பாடியார் மாபெரும் வெற்றிபெற்று புரட்சித்தலைவி அம்மாவின் புனித அரசை அமைப்பார் என்று திட்டவட்டமாக கூறி உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார். இதில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அம்மாவின் மறைவிற்குப்பின்பு பல்வேறு சூழ்ச்சிகளை, துரோகங்கள் எல்லாம் தகர்த்தெறிந்து தன் உழைப்பால், விசுவாசத்தால் முதலமைச்சராகி கழகத்தையும், ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தினார் எடப்பாடியார்.

இந்த அரசு ஒரு நாள் தாங்காது என்று கூறியவர்கள் மத்தியில், நான்காண்டு காலம் சிறப்பான ஆட்சி செய்தார். இந்த நான்காண்டு கால ஆட்சியில் 40 ஆண்டு கால திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். குறிப்பாக ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை உருவாக்கினார். இந்த கடைக்கோடி ராமநாதபுரம் மாவட்டத்திலும் மருத்துவக்கல்லூரி உருவாக்கி கொடுத்தவர் எடப்பாடியார் ஆவார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி நமக்கு எட்டிப்பிடிக்கும் தூரம் தான் இருந்தது. 43 தொகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தால் மூன்றாவது முறையாக புரட்சித்தலைவி அம்மாவின் புனித அரசை எடப்பாடியார் அமைத்திருப்பார்.

அது மட்டுமல்ல அது இந்த இயக்கத்தில் சில எதிரிகள் கழகத்திற்கு ஒத்துழையாமையாக இருந்ததால், உழைக்காத காரணத்தால், பிரச்சாரம் செய்யாதால் தான் இந்த தோல்வி ஏற்பட்டது. அவர் யார் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். இது பின்னடைவு தான் தோல்வி அல்ல.

இன்று தொண்டர்கள் எடுத்த முடிவுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் ஓபிஎஸ், அதனால் தான் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் 63 பேரும், கழகத்தில் உள்ள 75 மாவட்ட கழக செயலாளர்களின் 99 சதவீதம் சதவீதம் பேரும், 74 தலைமை கழக நிர்வாகிகளில் 99 சதவீதம் பேரும், பொதுக்குழு உறுப்பினர்களில் 99 சதவீதம் பேரும் எடப்பாடியாரை ஆதரித்து வருகின்றனர். இது உள்ளங்கையில் நெல்லிக்காய் இருப்பது போன்ற சான்றாகும்.

தென் மாவட்டம், கொங்கு மண்டலம், அதியமான் மண்டலம், டெல்டா மாவட்டம், மத்திய மாவட்டம் இப்படி அனைத்து மாவட்டங்களில் எடப்பாடியாருக்கு ஏகபோக ஆதரவு இருந்து வருகிறது. பன்னீர்செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது புதிது அல்ல.

இந்த இயக்கத்தில் 50 ஆண்டு காலமாக இதுபோன்று ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு பற்றி இங்கு விவாதம் செய்யக்கூடாது. பெரும்பான்மை யாரிடம் உள்ளது என்று அனைவருக்கும் தெரியும்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுக்குழு தான் அன்றைக்கு தேர்ந்தெடுத்து அதன் விதியை மாற்றியது. அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகிவற்றை எதிர்கொண்டோம். தொண்டர்கள் நம்பும் இந்த மரபு விதிப்படி தான் தற்போது கடைபிடிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற வழிகாட்டில் படி, மெஜாரிட்டியாக ஏக மனதாக எடப்பாடியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் தனக்கு பதவி கிடைக்கும் பொழுது இந்த விதியை பற்றி ஒன்னும் கூறாத ஓபிஎஸ், தற்போது தனக்கு பதவி இல்லை என்றவுடன் விதியை ஏற்க மறுக்கிறார்.

இந்த கட்சியில் பிளவு என்பது இல்லை, எடப்பாடியார் தலைமையில், வலிமையாக இந்த இயக்கம் உள்ளது. தனக்கு பதவி இல்லை என்றவுடன் ஓபிஎஸ் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஒன்றரை கோடி தொண்டர்களும் ஏற்கவில்லை. இன்றைக்கு கடைக்கோடி தொண்டர்களும், எடப்பாடியாருக்கு ஆதரவாக உள்ளனர்.

நிறைகுடம் தழும்பாது குறைகுடம் தழும்பும் என்பது போல், இன்றைக்கு நாங்கள் நிறைகுடமாக உள்ளோம், ஆனால் அவர்கள் குறைக்குடமாக தழும்பிக்கொண்டு, தங்களுக்கு ஆதரவு இருப்பது போல் மாயத்தோற்றத்தை உருவாக்கி குரல் எழுப்புவதை கண்டு மக்கள் முகம் சுளிக்கிறார்கள். நிச்சயம் வருகின்ற தேர்தலில் எடப்பாடியார், மாபெரும் வெற்றிபெற்று புரட்சித்தலைவி அம்மாவின் புனித அரசை அமைப்பார்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.