தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோடு

அரசு பள்ளிகளில் செப்டம்பர் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி கொளப்பலூர், எலத்தூர்,மற்றும் நம்பியூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் 640 பயனாளிகளுக்கு ரூ.13.28 லட்சம் மதிப்பீட்டில் அசீல் ரக நாட்டுக்கோழி குஞ்சுகளை பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசு பள்ளிகளில் செப்டம்பர் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். நீட் தேர்வு எழுதவரும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி குறித்து முதல்வர் அறிவிப்பார். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதால் ஆசிரியர்கள் கட்டாயம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் 1 ரூபாய் கூட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக பெற்றோர்கள் புகார் கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை அரசு பள்ளிகளில் 1.72 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. அரசு பள்ளியில் கடந்த ஆண்டை விட கூடுதலாக எத்தனை லட்சம் மாணவர்கள் சேர்த்தாலும் அனைவருக்கும் புத்தகங்கள் வழக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன், நம்பியூர் ஒன்றியக் கழக செயலாளர் தம்பி (எ) கே.ஏ.சுப்பிரமணியம், கோபி ஒன்றியக் கழக செயலாளர் சிறுவலூர் மனோகரன்,பவானிசாகர் ஒன்றியக் கழக செயலாளர் வி.ஏ.பழனிசாமி,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கெளசல்யா ஈஸ்வரமூர்த்தி, ஆவின் தலைவர் காளியப்பன்,எலத்தூர் பேரூராட்சி செயலாளர் சேரன் சரவணன், எம்.எம். செல்வம், எலத்தூர் சுலோச்சனா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.