தற்போதைய செய்திகள்

வரும் காலத்தில் ஸ்டாலின் வீட்டு கேட்டைக்கூட ஆறுகுட்டி பிடிக்க முடியாது -எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டம்

சென்னை

இன்றைக்கு அவருக்கு துண்டு போட்டுவிட்டதோடு சரி, ஸ்டாலின் வீட்டு கேட்டைக்கூட ஆறுகுட்டி பிடிக்க முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கேள்வி : முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி திமுகவில் இணைந்துள்ளாரே.

பதில் : அவரை நம்பி கழகம் இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பி தான் கழகம் செயல்பட்டு வருகிறது.

கேள்வி : டெண்டர் வழக்கு வரும்போது உங்களை காப்பாற்ற முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாரே.

பதில் : பார்க்கலாம். அவரும் இங்கு தானே இருக்கப்போகிறார். அவரை காப்பாற்றி கொள்ளட்டும். அமலாக்கத்துறையிலிருந்து அவர் காப்பாற்றி கொள்ளட்டும். என்னுடைய துறை எப்படி நடைபெற்றது என்று ஊடக நண்பர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் தெரியும்.

விரைவாக அந்த வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இன்றைக்கு உச்சநீதிமன்றம் வரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்றார்கள். என்ன ஆனது. மீண்டும் உயர்நீதிமன்றமே அந்த வழக்கை விசாரிக்கட்டும் என்று சொல்லி விட்டார்கள். நீதிமன்றத்தின் வழக்கு விவகாரத்தில் செல்வது சரியாக இருக்காது.

கேள்வி : திமுகவில் இணைந்துள்ள ஆறுக்குட்டி கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி அளிப்பதில்லை, அவர்களை யாரும் தலைமையில் மதிப்பதில்லை, அதன் காரணமாக நான் திமுகவில் இணைந்துள்ளேன் என்றும் மேலும் பலரும் வருவார்கள் என்று தெரிவித்துள்ளாரே.

பதில் : நான் 24 மணி நேரம் தொண்டர்களை பார்க்கிறேன். ஸ்டாலின் எத்தனை மணி நேரம் தொண்டர்களை பார்கிறார். யார் வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம். ஆறுக்குட்டி ஸ்டாலின் வீட்டு கேட்டைக்கூட பிடிக்க முடியாது.

இன்றைக்கு துண்டு போட்டுவிட்டதோடு சரி. அடுத்த முறை எங்கு பார்ப்பாரோ தெரியவில்லை. கழகத்தில் அப்படி இல்லை. கழகம் இப்போது ஆட்சியில் இல்லை. திமுக ஆளும் கட்சி. அதில் பயன் பெறுவதற்காக தாவியுள்ளார். வேடந்தாங்கல் பறவை போல காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.