தற்போதைய செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க செய்ய வேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் ஆர்.காமராஜ் உத்தரவு

திருவாரூர்

கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஆர்.காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி ஆகிய நகராட்சிகளில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் உடனிருந்தார்.

கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட நேருஜி நகர், மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட மூர்க்கவிநாயகர் கோவில் தெரு, மேலராஜவீதி ஆகிய கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு மேற்கொண்டு, குடியிருப்பு பகுதிகளில் தூய்மை பணிகள், பாதுகாப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகள் குறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டறிந்தார். கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் உத்தரவிட்டார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளாக பல்வேறு தொடர் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. அந்த வகையில் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களை மாவட்ட எல்லையில் கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிந்துசெல்ல வேண்டும், வெளியில் செல்லும்போது 1 மீட்டர் இடைவெளிவிட்டு சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும். அடிக்கடி கைகளை கழுவிட வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதையும் தவிர்க்க வேண்டும்.

அசாதாரன சூழ்நிலையில் பொதுமக்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே தங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்காக புரட்சித்தலைவி அம்மாவின் அரசு கட்டணமில்லா காணொலி மருத்துவ ஆலோசனை திட்டமான இ-சஞ்சீவினி (E-Sanjeevani) என்கிற ஆன்லைன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் https://esanjeevaniopd.in என்ற இணையதளத்தில் தங்களது அலைபேசி எண்ணை பதிவு செய்து கொண்டு, 9499933843, 9499933844, 9154153672, 9154153673 இந்த நான்கு கைபேசி எண்களை தொடர்பு கொண்டு வீடியோ கால் மூலம் நேரடியாக மருத்துவர்களை தொடர்புகொண்டு பொது மக்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். இத்திட்டத்தினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இவ்வாய்வில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை விஜயகுமார், வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோடி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.