கும்பகர்ணன் போல இந்த அரசு தூங்கி கொண்டிருக்கிறது -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை,
கும்பகர்ணன் போல இந்த அரசு தூங்கி கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கோவையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி : உட்கட்சியில் உள்ள அதிகார போட்டி காரணமாக தங்களுடைய குறையை மறைப்பதற்காகத் தான் ஆட்சி மீது குறை சொல்லி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்
பதில் : இப்போது நான் குறிப்பிட்டது எல்லாம் தவறா. ஊடகத்தினர் இங்கு உள்ளீர்கள். நான் இதுவரை குறிப்பிட்டது எல்லாம் தவறா. ஊடகத்தினரும், பத்திரிகையினரும் நடுநிலையோடு செயல்படுங்கள். நாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. தவறாக எதுவும் சொல்லவில்லை.
இந்த அரசை தட்டி எழுப்பி வருகிறோம். கும்பகர்ணன் போல இந்த அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. நான் ஒவ்வொரு முறையும், ஊடகத்தின் வாயிலாக, பத்திரிகையின் வாயிலாக, அறிக்கையின் வாயிலாக நடைபெறும் பிரச்சினையை இந்த அரசின் கவனத்திற்கு எடுத்து சொல்கிறோம்.
இந்த அரசு இதனை சரியான முறையில் கையாண்டு செயல்பட்டிருந்தால் இன்றைக்கு தமிழகம் சிறப்பாக இருந்திருக்கும். எதுவும் செய்யாத காரணத்தினால் தான் இந்த அவல நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே 1 லட்சத்து 7 ஆயிரத்து 62 பேருக்கு நலத்திட்ட உதவிகளை செய்யாத ஒரு செய்தி வந்து கொண்டுள்ளது.
இதுவும் அந்த அரங்கில் பேசப்பட்டதாக செய்தி கிடைத்துள்ளது. இவை அனைத்தும் ஏற்கனவே அம்மா அரசு இருந்த போது பயன் பெற்ற பயனாளிகளை அழைத்து வந்து 1 லட்சம் பேருக்கு அளிக்கப்பட்டதாக தவறான புள்ளி விபரத்தை அளிக்கிறார்கள்.
இவை அனைத்தும் கழக அரசு இருக்கின்ற போதே நிறைவேற்றப்பட்ட பயனாளிகளை அழைத்து வந்து இன்றைக்கு அந்த கூட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.