தற்போதைய செய்திகள்

தேங்காய்பட்டணம் துறைமுக முகத்துவாரத்தில் மணல்திட்டு அகற்றும் பணி ரூ.1.60 கோடியில் துவங்கும் – என்.தளவாய்சுந்தரம் தகவல்

கன்னியாகுமரி

ரூ.1.60 கோடி செலவில் தேங்காய்பட்டணம் துறைமுக முகத்துவார மணல் திட்டு அகற்றும்பணி விரைவில் துவங்கப்படவுள்ளது என்று தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரி நாராயணன், ஆகியோர் முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணம், இரையுமன்துறை பகுதியை பாதுகாப்பதற்காக நீரோடி முதல் பூத்துறை வரையுள்ள 7 கிராமங்களை சார்ந்த பங்குத்தந்தையர்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் ஆகியோருடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், அப்பகுதியை சார்ந்த பங்குத்தந்தையர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் இரையுமன்துறை பகுதியில் பழுதடைந்த சாலையினை சீரமைக்கவும், தேங்காய்பட்டணம் துறைமுக முகத்துவாரத்திலுள்ள மணல் திட்டுகளை அகற்றும் பணியினை விரைவில் துவங்க வேண்டுமெனவும், இரையுமன்துறை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமெனவும், கோரிக்கை வைத்தனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், தேங்காய்பட்டணம் துறைமுக முகத்துவாரத்திலுள்ள மணல் திட்டுகளை அகற்றுவதற்கு ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மணல் திட்டுகளை அகற்றுவதற்கு ராட்சத கிரேன் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் மணல் திட்டை அகற்றும் பணி நடைபெறும்.

மேலும், இரையுமன்துறையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகளும் விரைவில் துவங்கப்படும். ரூ.33 கோடி செலவில் இரையுமன்துறை பகுதியில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, தமிழக அரசின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கவனத்திற்கு எடுத்துச் சென்று, அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கூட்டத்தில், மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் டி.ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையப்பெருந்தலைவர் எம்.சேவியர் மனோகரன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் அ.ராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயசந்திரன் (எ) சந்துரு, பங்குத்தந்தையர்கள் டோனி ஹேம்லட் (நீரோடி), ரிச்சர்டு (வள்ளவிளை), ஜெரோம் (இரவிபுத்தன்துறை), டோனி (சின்னத்துறை), ஜாண்டால் (தூத்தூர்), அன்சல் (பூத்துறை), மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய நிர்வாக குழு உறுப்பினர் ஜே.ஜோஸ்பில்பின், ஆன்றோ மோரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.