ராயபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பை விடியா அரச திறக்காமல் இருப்பது ஏன்?முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னை
ராயபுரத்தில் கழக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை திறக்காமல் இருப்பது ஏன் என்று விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் எங்கு பார்த்தாலும் குண்டும், குழியுமான சாலைகள், அது மட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பருவமழையை எதிர்நோக்குகின்ற சூழ்நிலையில் கூட்டங்களை போட்டு, மாநகராட்சியை முடுக்கி விட்டு, குடிநீர் வாரியத்தை முடுக்கிவிட்டு, மின்துறை, வருவாய்த்துறை போன்றவற்றை முடுக்கிவிட்டு, மழைக்காலத்திற்கு முன்பாக செய்ய வேண்டுமே. அதனை செய்யத்தவறிய சூழ்நிலையில், ஒரு லேசான மழைக்கு கூட, ராயபுரம் மட்டுமல்ல. சென்னையில் பல இடங்களில் மேசமான நிலை உள்ளது.
கேட்டால் 1700 கிலோ மீட்டர் அளவில் நாங்கள் பணி செய்கிறோம் என்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட கால கட்டத்தில் செய்து முடிக்க வேண்டுமா இல்லையா. சென்னையில் எங்கு திரும்பினாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
லேசான மழை பெய்தாலும் கூட தற்போது நடைபெற்று வரும் பணிகளால் மீண்டும் அதே மணல் உள்ளே சென்று விடும் நிலை உள்ளது. இதனை துரிதமாக அப்புறப்படுத்த வேண்டும். உடனே மூட வேண்டும். கால்வாய் பணிகள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், வேறு வழிகளில் செல்லவும் வழி வகை செய்யவில்லை.
ராயபுரம் தொகுதியில் அம்மாவின் ஆசியோடு 25 வருடம் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். ஆனால் இவர்கள் செய்யும் பணியால் தற்போது கால்வாய் தண்ணீரில் நடந்து வரும் நிலை உள்ளது. ராமதாஸ் நகரில் 600 கோடிக்கு மேல் நிதியை ஒதுக்கீடு செய்து 1500 பேருக்கு வீடுகளை கட்டி தந்துள்ளோம்.
திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதம் ஆகிவிட்டது. இதனை திறக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் திறந்திருக்கலாம். உடனடியாக திறந்தால் அம்மாவின் அரசுக்கு நல்ல பெயர் வந்து விடும். இதற்காக இதனை மூடுவிழா செய்து விட்டார்கள்.
எங்களுக்கு நல்ல பெயர் வந்துவிடும். அதனால் மக்களை பழிவாங்க வேண்டும் என்ற வகையில் அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள். இதனை திறப்பதற்கு என்ன பிரச்சினை உள்ளது. குடிநீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பை தர வேண்டும் அவ்வளவு தான். அற்புதமாக இந்த அடுக்குமாடி குடியிருப்பை கட்டி முடித்திருந்த போதிலும் இந்த விடியா அரசு இதனை திறக்கவில்லை.
இந்த தொகுதியை பொறுத்தவரையில் பெயருக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார். சம்பளத்தை வாங்கிக்கொள்கிறாரே தவிர வேறு எந்த வேலையும் செய்வதில்லை. வாக்கு கேட்பதற்கு மட்டும் வந்தாரே தவிர மற்ற நாட்களில் வரவில்லை. இன்னும் நேரடியாக சவால் விட்டு சொல்கிறேன்.
இந்த பகுதிக்கு வரட்டும் பார்க்கலாம். இன்றைக்கும் நல்லதுக்கும், கெட்டதுக்கும் வருவது நாங்கள் மட்டும் தான். சட்டமன்ற உறுப்பினர் யார் என்று கூடத்தெரியாத நிலை உள்ளது. சட்டமன்றத்தில் சென்று சம்பளம் வாங்குவதற்கும், தன்னுடைய வியாபாரத்தை பெருக்குகின்ற அடிப்படையில் தான் இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர் இருக்கின்றாரே தவிர, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட கிடையாது.
இவ்வாறு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.
கேள்வி : நீங்கள் தான் 10 வருடமாக ஆட்சியில் இருந்தீர்கள்.
பதில் : நாங்கள் அனைத்து பணிகளையும் செய்தோம். ஆனால் இவர்கள் அதனை சரியாக பராமரிப்பு செய்யவில்லை. அதுதான் முக்கியம். பராமரிப்பு செய்யவில்லை என்றால் அது யார் தவறு. கழிவு நீர் கால்வாய் உள்ளது. அதனை சரியான முறையில் தூர் வாரியிருந்தால் தண்ணீர் தானாக சென்றிருக்கும். இது யார் தவறு. நாங்களா 16 மாதம் ஆட்சியில் இருக்கிறோம். சாலையை போட்டுத்தந்தோம்.
மழையில் குண்டு குழியும் அவ்வப்போது ஏற்படும். உடனே அதனை அடைத்து விடுவோம். ஆனால் தற்போது குண்டும், குழியும் இருந்தால் அதனை மூட வேண்டிய பொறுப்பு இவர்களுடையது. இதுதான் பராமரிப்பு பணி என்பது. பராமரிப்பு கிடையாது. தொலைநோக்கு பார்வை கிடையாது. மக்கள் குறித்து அக்கறை கிடையாது. இதனால் தான் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதே பகுதியில் பெரு மழை பெய்யும் போது பாருங்கள். இடுப்பளவு தண்ணீர் நிற்கும். நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது இதுபோன்ற நிலைமை இல்லை. முழுமையாக தண்ணீர் வடிந்து விடும். அப்படிப்பட்ட ஏற்பாடுகளை செய்திருந்தோம்.
இதுபோல கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது பெயருக்கு தான் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இன்றைக்கு மக்கள் பணி செய்து கொண்டிருப்பது கழகத்தை சேர்ந்த நாங்கள் தான். இன்றைக்கும் ஒரு குழந்தையிடம் சென்று கேளுங்கள். இந்த தொகுதியின் எம்.எல்.ஏ யார் என்று கேட்டால் ஜெயக்குமார் என்று தான் சொல்லும்.
கேள்வி : ராயபுரத்தை ராயல்புரமாக மாற்றுவேன் என்று தெரிவித்தார். நீங்களே தண்ணீரில் நடந்து வரும் நிலைமை தான் திராவிட மாடல் ஆட்சியா?
பதில் : இதுதான் திராவிட மாடல்.திராவிட மாடல் என்றால் முழுக்க முழுக்க சட்டம் ஒழுங்கை மோசமாக்குவது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது, கட்ட பஞ்சாயத்துகளில் ஈடுபடுவது, கொலை, கொள்ளை மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவது கமிஷன், கரப்ஷன், கமிஷன், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தராமல் இருப்பது, இது போன்ற விஷயங்களில் முன் மாதிரியாக இருப்பது தான் திராவிட மாடல்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.