தற்போதைய செய்திகள்

எடப்பாடியாரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் ஸ்டாலின் மவுனம்-வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேட்டி

மதுரை

தமிழகத்தில் இந்த ஒன்றரை ஆண்டுகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியாரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் ஸ்டாலின் மவுனம் சாதிக்கிறார் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கூறி உள்ளார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்களை போன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் பல்வேறு அறிவுகளை வழங்கி உள்ளார். அதில் சட்டமன்ற உறுப்பினர்கள். தேர்தல் நேரத்தில் வாக்குகளை சேகரிக்க சென்ற போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும்.

குறிப்பாக கல்வி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி தான் நாங்கள் செயலாற்றுகிறோம்.

மக்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் பேசினால், ஆளும் தரப்பில் இருந்து சரிவர பதில் வருவது இல்லை. அப்படி பதில் சொன்னால் கூட நிதி ஒதுக்கிறார்கள்.

அதற்குரிய எந்த நடைமுறையையும் பின்பற்றவில்லை. எதிர்க்கட்சிகளை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் தி.மு.க அரசு பார்க்கிறது. நான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையை நிறைவேற்றி வருகிறேன்.

தமிழகத்தில் இந்த ஒன்றரை ஆண்டுகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு போய் விட்டது என்று எடப்பாடியார் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

சட்டமன்றத்திலும் தெரிவித்து இருக்கிறார். அறிக்கைகள் வாயிலாகவும் கூறி வருகிறார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் தராமல் மவுனமாக இருக்கிறார்.

இவ்வாறு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா கூறி உள்ளார்.