தற்போதைய செய்திகள்

குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தி தர வேண்டும் -மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து, பொள்ளாச்சி வி.ஜெயராமன் மனு

கோவை

தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கொப்பரை தேங்காய் கொள்முதலை மீண்டும் துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.150 ஆக உயர்த்தி தர வேண்டும் என்றும் மத்திய அமைச்சரை கழக தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தென்னை விவசாயிகளின் நலன் கருதி கழக தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 4 லட்சம் ஹெக்டேரில் 12 கோடி தென்னை மரங்கள் உள்ளன. குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 1.2 கோடி தென்னை மரங்கள் உள்ளன. தமிழகத்தில் தென்னை மரங்கள் அதிகம் இருந்தாலும் கோவை, திருப்பூரில் உள்ள தென்னை மரங்களுக்கு வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த தேங்காய் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.105.90 ஆக நிர்ணயித்தது. மேலும் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து கொப்பரை கொள்முதலை தமிழக அரசு நிறுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இதையடுத்து கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.105.90 லிருந்து ரூ.150 ஆக உயர்த்தி தர வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதத்துடன் தமிழக அரசு கொப்பரை தேங்காய் கொள்முதலை நிறுத்தியுள்ளதால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே விவசாயிகளின் நலன் கருதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதலை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ உள்ளார்.

கோரிக்கை மனுவை மத்திய அமைச்சரிடம் அளிக்கும் போது கழக இளைஞர் அணி துணை செயலாளரும், வால்பாறை சட்டமன்ற உறுப்பினருமான டிகே.அமுல்கந்தசாமி, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் அன்னூர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.