சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை தி.மு.க.வினரால் மறைக்க முடியாது

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு
மதுரை
வானத்தை போர்வையால் மூட முடியாது. சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை தி.மு.க.வினர் மறைக்க முடியாது என்று
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறி உள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டை ஆட்சியாளர்கள் திசை திருப்பி வருகின்றனர். வானத்தை போர்வையால் கொண்டு மறைக்க முடியாது. அதேபோல் தமிழகத்தின் நடைபெறும் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை ஆட்சியாளர்கள் எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் மறைக்கவே முடியாது.
41,000 நபர்கள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். இதன் மூலம் திமுக ஆட்சியில் கஞ்சா போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்பது தானே அர்த்தம்? அதுமட்டுமல்ல, அரசு பேருந்துகளில் கஞ்சா கடத்தப்பட்டதாக செய்திகள் கூட வருகிறது.
இதில் வேதனை அளிக்கும் செய்தி. ஏன் என்றால் மதுரையில் உள்ள பெரியார், ஆரப்பாளையம், அண்ணா பஸ் நிலைய பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட சில மாணவர்கள் குழுவாக கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கப்பட்டு உள்ளார்கள்.
கூல் லிப்ஸ் என்ற சிறிய போதை பாக்கெட்டை வாயில் வாயில் ஒதுக்கிய மாணவர்கள் தற்போது, கஞ்சா பொட்டலங்களை பயன்படுத்துவதாக அதிர்ச்சியான தகவல் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதேபோல் ஆன்லைன் சூதாட்டத்தில் 30 பேர் பலியாகியுள்ளனர் ஆனாலும் அதற்கு குழு அமைக்கிறேன் என்று முதலமைச்சர் காலம் தாழ்த்துகிறார்.
எடப்பாடியாரின் ஆட்சியில் போதை பொருட்கள் அனைத்தும் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்டம் கூட தடை செய்யப்பட்டது. எடப்பாடியார் ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. தற்போது சட்டம், ஒழுங்கு சீர்கேட்டில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தை பிடித்து விடுமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறி உள்ளார்.