கழக மாமன்ற உறுப்பினர்கள் கூறியதால் ஆளும் தி.மு.க. கவுன்சிலர்கள் அராஜகம்

சேலம்
சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டதற்கு கழக ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்ட நடவடிக்கையால் தான் என்று கழக மாமன்ற உறுப்பினர்கள் கூறியதால் சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சி மன்ற இயல்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் மாமன்ற கழக உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான யாதவமூர்த்தி மாமன்ற கூட்டத்தில் விதிமுறைப்படி கட்சி வாரியாக பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றார். அவரை தொடர்ந்து ஆளுங்கட்சியினர் பேசும்போது சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேசினர்.
அப்போது மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி பேசும் போது, கடந்த கழக ஆட்சியின் போது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாநகராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்ததும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சேலம் மாநகராட்சியில் நடைமுறைப்படுத்தியதும் தான் இந்த விருது வாங்கியதற்கு காரணம் என்று குறிப்பிட்டார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. உறுப்பினர்கள், கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது.