தற்போதைய செய்திகள்

தொண்டர்களிடமும், மக்களிடமும் நம்பிக்கையை ஓபிஎஸ் பெறவில்லை -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

மதுரை

தொண்டர்களிடமும், மக்களிடமும் நம்பிக்கையை பெறவில்லை. யாரை விலை பேசி பேசினாலும், அவர்கள் விசுவாசமான தொண்டர்களாக இருக்க மாட்டார்கள் என்று ஓபிஎஸ்சை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக தாக்கி உள்ளார்.

முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கூறியிருப்பதாவது:-

கடந்த நான்காண்டுகளில் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது, அம்மாவின் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் 40 ஆயிரம் போராட்டம் நடத்தினார்கள்.

அதையெல்லாம் தன்னுடைய மதி நுட்பத்தால் எதிர்கொண்டு முறியடித்தார் எடப்பாடியார். அது மட்டுமல்ல தி.மு.க.வின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து ஒரு கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை இந்த இயக்கத்திற்கு பெற்று தந்தார். கூட்டணி கட்சிகளை எல்லாம் சேர்த்து 75 சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கி கொடுத்தார்.

எடப்பாடியாருக்கு மக்களின் செல்வாக்கு, தொண்டர்களின் செல்வாக்கு இருப்பதால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் 93,802 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால் நீங்கள் தொண்டர்களிடமும், மக்களிடமும் நம்பிக்கையை பெறவில்லை. அதனால் தான் 11,201 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றீர்கள்.

234 சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடியார் சூறாவளி பிரச்சாரம் செய்ததால் 33.29 சதவீத வாக்குகளை பெற்று தந்து அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை தக்க வைத்தார். இதில் அவருக்கு எந்த சுயநலமும் இல்லை. பொதுநலத்துடன் தான் செயல்பட்டார் என்பதற்கு இதுவே சாட்சி.

நான் ஓபிஎஸ்சை காயப்படுத்துவதற்காக இதை சொல்லவில்லை. உண்மையை தான் சொல்கிறேன். எடப்பாடியாரின் முடிவுக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் ஆதரவாக உள்ளனர். யாரை விலை பேசி பேசினாலும், அவர்கள் விசுவாசமான தொண்டர்களாக இருக்க மாட்டார்கள். நீங்கள் செய்யும் நடவடிக்கையால் உங்களை வரலாறு மன்னிக்காது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.