பொள்ளாச்சி வந்த ஸ்டாலின் திட்டங்களை அறிவிக்காதது மக்களுக்கு பெரும் ஏமாற்றம் -முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேட்டி

கோவை,
பொள்ளாச்சிக்கு வந்த ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்காதது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறி உள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கழக தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கடந்த ஜூலை மாதத்துடன் கொப்பரை தேங்காய் கொள்முதல் காலம் முடிவடைந்தது. ஆனால் அதன் பிறகு தமிழக அரசு கொப்பரை கொள்முதலை நீட்டிக்க அக்கறை காட்டவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மத்திய மந்திரியிடம் நேரில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டதால் கொள்முதல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி மேலும் மூன்று மாதங்களுக்கு கொப்பரை தேங்காய் கொள்முதலை நீட்டிக்கவும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பரவலாக கொள்முதலை செய்ய வேண்டும்.
மேலும் தென்னை நார் பொருட்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியால் கண்ணீர் வடிக்கிறார்கள் விவசாயிகள். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடலுக்கு தீங்கு விளைகின்ற இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை தமிழக அரசு விநியோகம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியும்.
மேலும் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு ஸ்டாலின் வருகை தந்த போது முக்கிய திட்டங்களை அறிவிப்பார் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.
குறிப்பாக பிஏபி திட்டத்தில் நிறைவேற்றப்படாமல் உள்ள ஆனைமலை நல்லாறு திட்டம், பாண்டியாறு புன்னம்புழா திட்டம், ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் குடிநீர் திட்டம் ரத்து போன்ற முக்கிய திட்டங்கள் குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இத்திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசவில்லை. இது பொது மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.
பொள்ளாச்சிக்கு ஸ்டாலின் வருகை தந்த போது 50 ஆயிரம் பேர் சென்றதாக கூறினார்கள். அதிமுகவிலிருந்து 5பேர் கூட செல்லவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் ஒரு சிலர் அங்கே போவார்கள். இங்கே வருவார்கள்.
அவர்கள் தான் அங்கு சென்றனர் தவிர எந்த முக்கிய நிர்வாகியும் செல்லவில்லை. வீண் விளம்பரம் வீண் களேபரம்.
மேலும் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் 20 ஆண்டுகளாக வசித்து வந்த ஏழை மக்களின் குடிசைகளை
ஸ்டாலினின் பாதுகாப்பு என்ற பெயரில் ஏழை மக்கள் வசித்த குடிசைகளை காலி செய்து அவர்களை அனாதையாக விட்டுச் சென்றுள்ளனர்.
இவ்வாறு கழக தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ கூறினார்.
பேட்டியின் போது நகர கழக செயலாளரும், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வி.கிருஷ்ணகுமார், ஒன்றிய கழக செயலாளர் செந்தில் குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் டி.ஜேம்ஸ் ராஜா உள்பட பலர் உள்ளனர்.