அவர்களை கட்சியில் இணைப்பது ஜென்மத்துக்கு நடக்காது -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை,
ஓ.பி.எஸ்., டிடிவி., சசிகலா ஆகியோர் வேண்டுமானால் ஒன்றிணையலாம். ஆனால் இவர்களையெல்லாம் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் ஜென்மத்துக்கும் நடக்காத காரியம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறிஉள்ளார்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: லஞ்ச ஒழிப்புத்துறை உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறது என்கிறார்களே?
பதில்: தாராளமாக வரட்டும். வீட்டில் நிறைய குப்பைகள் இருக்கின்றன. வீட்டையெல்லாம் சுத்தம் செய்துவிட்டு போகட்டும்.
கேள்வி: இதன் பின்புலத்தில் தி.மு.க. அல்லது காவல்துறை யாராவது இருக்கிறார்களா?
பதில்: தி.மு.க., தி.மு.க.வின் ஏவல்துறையான காவல்துறை மற்றும் நம்முடைய அரசியல் எதிரி அ.ம.மு.க., சமீபத்தில் இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்து, பிரிந்து போய் “நாம் ஒருவர் நமக்கு ஒருவர்” என்று இருக்கின்ற ஓ.பி.எஸ். தரப்பு உட்பட எல்லோரும் சேர்ந்து இந்த கட்டுக்கதை, இட்டுக்கதை வேலையெல்லாம் பரப்புகிறார்கள். அதனால் “மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். மடியில் கனம் இல்லாதவர்களுக்கு வழியில் பயம் இருக்காது.” ஆகவே என் வாழ்க்கையில் இது பயம் இல்லாத ஒன்று.
கேள்வி: பேருந்தில் பிங்க் கலரில் பேருந்து பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். இது 20 சதவீதம் தான் அடித்திருக்கிறார்கள். 80 சதவீதம் அடிக்கவில்லையே?
பதில்: உலகத்திலேயே ஒரு ஹிட்லர் ஆட்சி என்று பார்த்தால் தி.மு.க. ஆட்சியைத் தான் சொல்ல வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி விட்டு திராவிடத்தையே இழிவுப்படுத்தும் விதமாக இன்றைக்கு அவர்களுடைய செயல்பாடு இருக்கிறது. மற்ற மாநிலங்களான அசாம், கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் புது பேருந்துகளில் மகளிருக்கு என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
இதை நல்ல விஷயமாக அனைவரும் அவர்களை பாராட்டுகிறார்கள். ஆனால் பழைய பேருந்துக்கு முன்னாடியும் பின்னாடியும் மட்டும் பெயிண்ட் அடித்துவிட்டு சைடில் இரண்டு பக்கமும் பெயிண்ட் அடிக்காமல் இருக்கிறது.
இது அவமானமாக இருக்கிறது. 10 சதவீதம் தான் இந்த பேருந்து உள்ளது. பெண்களை ஏமாற்றும் வேலையாக இந்த திட்டம் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி தமிழ்நாட்டை தாண்டியும் இந்த அவமானம் கப்பலேறி விட்டது.
மேலும் மகளிருக்கு இலவசம் என்று சொல்லிவிட்டு பேருந்து சரியான நேரத்து பேருந்துகள் வருவதில்லை. மிகக் குறைவாகவே பேருந்துகள் வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் ஆல் ரூட் பஸ் பாஸ் என்று ஒரு பஸ் பாஸ் கொடுத்திருந்தார்கள்.
எந்த பேருந்தில் எங்கு வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் போகலாம். அதுபோல இந்த அரசாங்கம் ஆல் ரூட் பஸ் பாஸ் மகளிருக்கு கொடுக்கலாமே? அப்படி கொடுத்தால் அவர்கள் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய அவசியமே இருக்காது.
எல்லா பேருந்துகளிலும் பயணம் செய்வார்கள். உங்களை அவர்கள் (மகளிர்) பாராட்டுவார்களே. அதைவிட்டு விட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் வரும் அந்த பேருந்தில் முன்னாடியும், பின்னாடியும் பிங்க் கலர் அடித்துவிட்டால் எத்தனை பேர் தான் பயணம் செய்வார்கள்? மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு இப்படி மோசமான திட்டங்களை செயல்படுத்தி, அதன் மூலம் ஆதாயம் தேட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதெல்லாம் நடக்காத காரியம்.
கேள்வி: ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு
கழக ஆட்சியில் ஓ.பி.எஸ். பதவிகளை அனுபவித்தவர். இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆட்சியின் போது மறைமுகமாக டிடிவி தினகரனை பார்த்தவர். இதனை அவரே ஒப்புக்கொண்டார். கமலஹாசன் நடித்த மூன்றாம் பிறை படத்தில் வரும் கதையில் நரி நீல நிறத்தில் கலர் வேஷம் போட்டு ராஜாவாக காட்டுக்கு காட்சியளித்திருக்கும்.
மழை பெய்த பின்புதான் நரியின் வேஷம் எல்லாருக்கும் தெரியும். அதுபோலத்தான், இனிமேல் அந்த நரியின் தந்திரங்கள் எல்லாம் எடுபடாது. கழகத்தை அவர்களால் அசைக்கவோ, ஆட்டவோ முடியாது.
கேள்வி: பிரிவினையெல்லாம் மறந்து ஒன்றாக இணைய வேண்டும் என்கிறார்களே?
பதில்: அதற்கு வாய்ப்பு இன்றும் கிடையாது, நாளையும் கிடையாது, என்றுமே கிடையாது. ஓ.பி.எஸ்., டிடிவி., சசிகலா ஆகியோர் வேண்டுமானால் ஒன்றிணையலாம். ஆனால் இவர்களையெல்லாம் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் ஜென்மத்துக்கும் நடக்காத காரியம்.
கேள்வி: இதுவரையில் அரசு மருத்துவமனையில் கஞ்சா புழக்கமே இருந்ததில்லை. ஆனால் இவங்க ஆட்சிக்கு வந்த பின்பு 5 கிலோ கஞ்சா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்ததாக கண்டுபிடிச்சியிருக்காங்க. அது மட்டுமின்றி 2 நாட்களுக்கு முன்பு புது வண்ணாரப்பேட்டையில் ஒரு பெண் கடத்தப்பட்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு குறித்து?
பதில்: சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமாக உள்ளது. விழுப்புரத்தில் தி.மு.க.வை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி ஒரே நாளில் 3 கொலைகள் நடந்தன. போரூரில் காரில் இருந்த பெண்ணை கடத்தியதோடு கூட்டு பாலியல் பலாத்காரமும் நடந்துள்ளது.
இதுபோல கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், மாணவிகளின் மர்ம மரணம் என அதிகரித்துள்ளது. தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் முதலிடம் பிடித்துள்ள மாநிலமாக இருக்கிறது. மக்கள் வாழ முடியாத நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. குறிப்பாக போதை பொருட்கள் தலைவிரித்தாடுகிறது.
சட்டம் ஒழுங்கு சீர் செய்வதற்கு ஒரு ஆட்சியாளர் எல்லா தகவல்களை பெற்று காவல்துறையை முழுமையாக பயன்படுத்தி, துரிதப்படுத்தி இரும்புக்கரம் கொண்டு அடக்கினால் சட்டம் ஒழுங்கு சீர்படும். ஆனால் அதை செய்யாமல் காவல்துறையை ஒரு ஏவல் துறையாக ஆக்கி, எதிர்க்கட்சியினரை பழிவாங்க வேண்டும், அ.இ.அ.தி.மு.க.வினரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் காவல்துறையை பயன்படுத்துகிறார்களே தவிர சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் முழுமையாக கவனம் செலுத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் கிடையாது.
ஏற்கெனவே நான் சொன்னேன், ஒரு துக்ளக் அரசாங்கம் போல ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். எந்த மாநிலத்திலாவது இதுபோன்று நடக்குமா? இது தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சந்தேகத்தை அல்லவா ஏற்படுத்துகிறது?
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.