சிறப்பு செய்திகள்

`அம்மா மினி கிளினிக்’ மூலம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை – முதலமைச்சர் உறுதி

சென்னை

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இத்திட்டத்தை அவர் சென்னையில் நேற்று தொடங்கி தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலம், சேக் மேஸ்திரி தெரு, தண்டையார்பேட்டை மண்டலம், வியாசர்பாடி, எம்.பி.எம். தெரு மற்றும் தேனாம்பேட்டை மண்டலம், மயிலாப்பூர், கச்சேரி சாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை துவக்கி வைத்து பேசியதாவது:-

தற்போது ஒரு புதிய முயற்சியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத, ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் கண்டறிந்து, சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்தப் பகுதியிலேயே சிகிச்சை பெறக்கூடிய அளவிற்கு தமிழ்நாடு முழுவதும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன்

2,000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் இன்றைக்கு ( நேற்று) துவங்கப்பட்டிருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மா மினி கிளினிக்குகள் மூலமாக ஏழை, எளிய மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அங்கேயே அவர்கள் தங்கள் உடலில் ஏற்படுகின்ற நோய்களுக்கு சிகிச்சை பெறக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கின்றோம். இது வரலாற்றுச் சாதனையாகும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படுகின்ற அரசு என்பதை நாங்கள் இந்த நேரத்தில் நிரூபித்துக்காட்டிக் கொண்டிருக்கின்றோம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள். எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும், நோய் வந்துவிட்டால் செல்வத்தை அனுபவிக்க முடியாது. அப்படிப்பட்ட நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கித் தரவேண்டும், அதுவும் குறிப்பாக ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மக்களுக்கு நோய் ஏற்படுகின்றபோது தனியார் மருத்துவமனைக்குச் சென்றால், 100 அல்லது 200 ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையிருக்கின்றது, அந்த சுமைகூட இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் அம்மாவின் அரசு, குறிப்பாக ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பகுதியிலேயே அம்மா மினி கிளினிக்குகளை உருவாக்கி, அப்பகுதி மக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை எங்களுடைய அரசு தொடர்ந்து வழங்கும் என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.