சிறப்பு செய்திகள் தமிழகம்

உயிரோட்டமுள்ள அ.தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம்

திருச்சி

கழகத்தில் சிலர் குழப்பம் விளைவிக்க பார்க்கிறார்கள் என்றும், உயிரோட்டமுள்ள இயக்கம் அ.தி.மு.க. என்றும், இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வருகை தந்த எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி விமானநிலையம் எதிரே உள்ள வயர்லெஸ் ரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியதாவது:-

விவசாயிகள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் ஓடி, ஓடி சென்று உதவி செய்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம். மழையால், வெள்ளத்தால், புயலால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்ற பொழுது அந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை அதிகமாக கொடுத்தது அம்மாவுடைய அரசாங்கம்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாம் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 6000 ரூபாய் மட்டும் தருகிறார்கள்.

இரவு-பகல் பாராமல் உழைக்கின்ற அந்த விவசாயி நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு கண்ணை இமை காப்பது போல் விவசாயிகளை காத்தோம். இன்றைய அரசாங்கம் விவசாயிகளை காக்கின்றதா? இன்றைக்கு மழையால், வெள்ளத்தால் நெல் மணிகள் எல்லாம் பாதித்தது. கனமழையால், நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமானது.

எந்த அமைச்சராவது நேரில் சென்று பார்த்தார்களா? எந்த அமைச்சரும் சென்று பார்க்கவில்லை. நான் முதலமைச்சராக இருக்கின்ற பொழுது எப்போதெல்லாம் மழையால், வெள்ளத்தால், இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் ஓடி, ஓடி சென்று பார்த்து ஆறுதல் சொல்லி நிவாரணம் வழங்கிய ஒரே அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம். வறட்சியால் பாதிக்கப்பட்ட போது விவசாயிகளுக்கு உதவி செய்தோம்.

அதேபோல், குடிமராமத்து திட்டம். ஏரி, குளம், குட்டை எல்லாம் தூர்வாரி பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் முழுவதும் தேக்கி விவசாயிகள் பயன்பெற செய்தோம். டெல்டா பகுதி உழவர் பெருமக்கள் நம்முடைய நிலம் பறி போய் விடுமோ என்ற அச்சத்தில் இருந்தபொழுது, அந்த அச்சத்தை போக்குகின்ற விதமாக விவசாயிகள் வைத்த கோரிக்கை, நம்முடைய அமைச்சர்கள் வைத்த கோரிக்கை,

சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையிலே மத்திய அரசோடு தொடர்பு கொண்டு விவசாயிகளின் நிலங்களை பாதுகாக்கின்ற விதமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்து சட்டமாக்கி, சட்டத்தை நிறைவேற்றி, விவசாயிகளை பாதுகாத்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.

50 ஆண்டு காலமாக நடைபெற்று கொண்டிருந்த காவேரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்ட ஒரே அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம். கழகத்தில் சிலர் குழப்பம் விளைவிக்க பார்க்கின்றார்கள். எந்த கொம்பனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது. இது உயிரோட்டம் உள்ள இயக்கம்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.