தற்போதைய செய்திகள்

கழகத்தில் பிரிவினைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பிஎஸ் -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

மதுரை

அம்மாவின் மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் பிரிவினைக்கு அன்றைக்கு பிள்ளையார்சுழிபோட்டவர் ஓ.பி எஸ் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.

முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வை 1972ம் ஆண்டு புரட்சித்தலைவர் தொடங்கினார். புரட்சித்தலைவரும் தனது ஆயுள் காலம் முழுவதும் முதலமைச்சராக இருந்தார். அதன் பின்பு 1991ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா மீண்டும் புனித ஆட்சியை மலரை செய்தார். அப்போதெல்லாம் அம்மாவின் முதலமைச்சர் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை.

2001ம் ஆண்டில் புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, தென்தமிழ் நாட்டில் இருந்து ஒரு சுயநலத்தின் அடையாளமாக மவுன சிரிப்பிலே ஒரு மர்ம தேசத்தை உள்ளடக்கி, ஒரு புண்ணியவான் போல் வெளி தோற்றத்தை உருவாக்கிக்கொண்டு, அத்தனை சித்து விளையாட்டுகளையும் செய்யக்கூடிய ஓ.பன்னீர்செல்வம், 2001ம் ஆண்டில் அம்மா ஆட்சிப்பொறுப்பை ஏற்றதற்கு பிறகு முதலமைச்சர் பதவிக்கு, அம்மாவிற்கே ஆபத்து வந்தது.

இதுவரை அ.தி.மு.க.விலும் சரி, எந்த இயக்கத்திலும் சரி, முதலமைச்சர் பதவிக்கு சட்டப்பூர்வமாக ஆபத்து வந்தது கிடையாது. அப்படி ஆபத்து வருகிற சூழ்நிலை எதனால் என்பதை ஓ.பன்னீர்செல்வத்தின் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.

அதற்குப்பிறகு அம்மா அவர்கள் தன்னுடைய அயராது உழைப்பால் இரவு, பகல் பாராது தன்னுடைய சேவையால் மீண்டும் 2011ம் ஆண்டில் அம்மாவின் புனித ஆட்சி மலர்ந்தது

அப்போதும் அம்மாவின் முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்தது. இந்த முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து வருவதற்கு யார் காரணம் என்பதை உங்கள் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன். சுயநலத்தின் மறு உருவமாக இருக்கிற ஓ.பன்னீர்செல்வம் அன்றைக்கு மீண்டும் முதலமைச்சராக வருகிறார்.

அவர் செய்த சித்து விளையாட்டுகளை ஓ.பன்னீர்செல்வம் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்கு பிறகும், அந்த முதலமைச்சர் பதவி பெற்று விடுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் செய்த சித்து விளையாட்டுகளை அவர் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.

இப்படி அம்மா அவர்களின் முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து வருகிற போதெல்லாம் அதை தனக்கு சாதகமாக்கி முதலமைச்சர் பதவியில் அமர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தேன் என்று மார்தட்டி கொள்கிற சுயநலத்தின் மொத்த உருவம் ஓபிஎஸ்சின், சொந்த மாவட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை தியாகம் செய்த தங்க தமிழ்ச்செல்வனை கட்சியிலிருந்து ஓரம் கட்டி, இன்றைக்கு அவர் தி.மு.க.வில் அடைக்கலமான சூழ்நிலை உருவாகியதையும் ஓ.பன்னீர்செல்வம் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.

சாதாரண பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவிக்கு தேவைப்படும் போது எல்லாம் பரிந்துரை செய்த டி.டி.வி. தினகரனை அரசியலில் அப்புறப்படுத்த, ஓ.பன்னீர்செல்வம் நடத்திய சித்து விளையாட்டுகளில் அவர் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழி, அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது,

ஒரு குடும்பத்தின் சர்வாதிகாரத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று, அம்மா மறைந்த இரண்டு மாதம் பிறகு அவர் பதவிக்கு ஆபத்து வந்த பிறகு அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று குழப்பத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க.வின் பிரிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது யார்?

அன்றைக்கு போட்ட பிள்ளையார் சுழி பிரிவினை என்பது இன்று வரை ஒட்டாத கண்ணாடியாக என்றைக்கும் அந்த பிரிவினைக்கு தொடர்ந்து தலைமை தாங்கி நடத்தி வருபவர் ஓபிஎஸ் ஆவார்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.