விடியா அரசை கண்டித்து அடுத்தக்கட்ட போராட்டம்-அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் திட்டவட்டம்

சென்னை
விடியா தி.மு.க. அரசை கண்டித்து அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிப்போம் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் திட்டவட்டமாக கூறினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்புடையதாக இல்லாததை கண்டித்து, அண்ணா தொழிற்சங்கப்பேரவை சார்பாக சென்னை, பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் பேசியதாவது;-
அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடங்கும் போது, அப்போதைய எதிர்க்கட்சி மற்றும் ஆதரவு சங்கங்கள் 25 சதவீத ஊதிய உயர்வு கோரினர். நிதி நெருக்கடி காரணமாக 10 முதல் 12 சதவீதம் வரை தருவதாக அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதை அப்போது எதிர்க்கட்சி மற்றும் ஆதரவு சங்கத்தினர் புறக்கணித்தனர். தற்போது விடியா அரசு 5 சதவீத ஊதிய உயர்வையே அளித்துள்ளது. ஊதிய உயர்வு வழங்கியதிலும் 35 மாதங்களுக்கு பணப்பலன்களை வழங்கவில்லை.
போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த காலம் 3 ஆண்டுகள் இருந்ததை 4 ஆண்டுகளாக அதிகரித்ததை எதிர்ப்பு தெரிவித்து பேசியதற்கு, மற்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் ஊதியம் முறைப்படுத்துவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படியானால் மற்ற துறைகள் போல, போக்குவரத்து கழக ஓட்டுநர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று அண்ணா தொழிற்சங்கப் பேரவை வலியுறுத்தியது. மற்றும்
ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள டிஏ மற்றும் பணப்பலன்களை உடனே வழங்கிடவும், அண்ணா தொழிற்சங்கப்பேரவை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளாததற்கும் அண்ணா தொழிற்சங்க பேரவை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தது.
போக்குவரத்து ஊழியர்களின் நலனை முதல்வர் கவனத்தில் கொள்ளாதது வருந்ததக்கது, கண்டிக்கத்தக்கது. எங்களுடன் சில சங்கங்கள் பேசி வருகின்றன. கூட்டு குழுவாக இணைந்து அடுத்தக்கட்ட ஆர்ப்பாட்டத்தை அறிவிப்போம்.
விடியா அரசின் தொழிலாளர்களின் விரோத போக்கை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து மண்டலங்களிலும் நடைபெற உள்ளது. சேலம், திருப்பூரில் 29-ந்தேதியும், ஈரோடு, கோவை, நீலகிரியில் 30-ந்தேதியும், விருதுநகர், திருநெல்வேலியில் 2.9.2022 அன்றும், நாகர்கோவிலில் 3.9.2022 அன்றும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் பேசினார்.