தற்போதைய செய்திகள்

அ.தி.மு.க.வை தனது குடும்ப சொத்தாக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்கிறார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

மதுரை

அ.தி.மு.க.வை தனது குடும்ப சொத்தாக வேண்டும் என்பதற்காக ஒற்றுமை என்ற நாடகத்தை ஓ.பன்னீர்செல்வம் நடத்துகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.
முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் தனது சிரிப்பில், அத்தனை அசுர குணங்களை மனதில் வைத்து உள்ளார். வெளித்தோற்றத்தில் அவர் காட்டுவது மாயத்தோற்றம். நிச்சயம் ஒரு நாள் மக்கள் அவரின் அரக்க குணம், அசுர குணம் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இன்றைக்கு அவர் ஒழித்துக்கட்டியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. முதலமைச்சர் பதவி மீது அவர் கொண்ட வெறியின் காரணமாக, புரட்சித்தலைவர் உருவாக்கிய இயக்கத்தை, அம்மா பாடுபட்டு வளர்த்த இயக்கத்தை தனக்கும், தன் பிள்ளைக்கும் குடும்ப சொத்தாக வேண்டும் என்பதற்காக, அவர் நடத்தும் நாடகம் தான் அ.தி.மு.க ஒற்றுமையாக வர வேண்டும் என்ற நாடகம்.

முதலிலே பிரிவினை நாடகத்தை அரங்கேற்றி அம்மா மரணத்தில் மர்மம் என்று சொல்கிறார். ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவக்குழு அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் எந்தவித சந்தேகம் இல்லை என்று கூறுகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக இருந்த போது, ஏழு முறை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. ஏன் ஒரு முறை கூட நீதிபதி கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சி சொல்ல முன் வரவில்லை. பதவி போன பின்பு எட்டாவது முறையாக ஆஜராகி அந்தர்பல்டியாக தலைகீழாக மாற்று கருத்துக்களை சொன்னார் ஓ.பன்னீர்செல்வம்.

தன்னை எதிர்ப்பவர்களை அடியோடு அழிப்பவர் தான் ஓ.பன்னீர்செல்வம். அவர் எடுத்து வரும் சித்து விளையாட்டுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் அம்மா அவர்களே தப்பவில்லை. கடைசியில் முதலமைச்சர் பதவி தன்னிடம் சேரும் வகையில் சித்து விளையாட்டை நடத்தி காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.