தி.மு.க.விலும் இதே நிலைமை வரும் நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்

விழுப்புரம்
ஓ.பி.எஸ்.சின் துரோகத்தை எந்த தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள். தி.மு.க.விலும் இதே நிலைமை வரும். அதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறி உள்ளார்.
கழக ஆட்சியின் போது மரக்காணத்தில் தொடங்கிய கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரத்து செய்த விடியா தி.மு.க. அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட கழகம் சார்பில் திண்டிவனம் காந்தி சிலை அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்.பி பேசியதாவது:-
விழுப்புரம். கள்ளக்குறிச்சி மாவட்டம் வானம் பார்த்த பூமி. எனவே கிராம மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முடக்கிய விடியா அரசு மீண்டும் திட்டத்தை தொடர வேண்டும்.
இந்த திட்டமானது மாநகராட்சியில் தான் தொடங்கப்படும். ஆனால் முதல் முறையாக நகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மரக்காணம் அடுத்த கூனிமேட்டில் இடம் தேர்வு செய்து அதற்கான நிதியை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆட்சியில் திமுக அமைச்சர்களுக்கு வேலையே இல்லை. யார் ஆட்சி நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு பொம்மை ஆட்சியாகத்தான் நடக்கிறது. இவர்களுக்கு தலைமைச்செயலகம் செல்ல துப்பில்லாமல் அண்ணா அறிவாலயம் எதிரே மினி அறிவாலயத்தை உருவாக்கி உள்ளார்கள்.
தமிழக முழுவதும் பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா கிடைக்கின்றது என்று புகார்கள் எழுந்துள்ளது. ஸ்டாலினுக்கு கஞ்சாவை தவிர வேற என்ன தெரியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். மக்களின் குடிநீர் உணவு, சுகாதாரம் ஆகியவை இன்றியமையாததாகும்.
இவர்கள் ஆட்சியில் முதலில் போடப்பட்ட டெண்டர் பொங்கல் பரிசு. அது கலப்பட பொங்கலாக மாறி உள்ளது. இதுவரை சுகாதாரத்துறையில் மருத்துவமனையில் மருத்துவர்கள் தட்டுப்பாடு மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு 70 சதவீதமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் கொள்முதல் செய்யாததே ஆகும். அம்மா ஆட்சியில் 18 மாதத்தில் வீராணம் திட்டத்தை முடித்து காட்டியவர் நமது புரட்சித்தலைவி அம்மா.
அமைச்சர் பொன்முடி இந்த விழுப்புரம் மாவட்டத்தை வளர விட மாட்டார். இந்த விடியா அரசு கழகத்தை ஒடுக்க பார்க்கிறது. திமுகவின் பி டீமாக ஓ.பி.எஸ் விளங்குகிறார். கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் யாரும் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. இது தொண்டர்கள் நிறைந்த இயக்கம்.
இந்த இயக்கத்தை யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. ஓ.பி.எஸ்.சின் துரோகத்தை எந்த தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள். தி.மு.க.விலும் இதே நிலைமை வரும். அதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்.
கழகமானது 50 ஆண்டுகளில் 32 ஆண்டு காலம் ஆட்சிக்கட்டிலில் இருந்து இருக்கிறது. எனவே ஸ்டாலினே நீங்கள் வாக்களித்த மக்களுக்கு நன்மைகளை செய்ய பாருங்கள். உங்களால் கழகத்தை ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.