தமிழகம்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தரச்சான்றிதழுடன் பரிசுத்தொகை – தலைமை மருத்துவ அலுவலர்களிடம் முதலமைச்சர் வழங்கினார்

சென்னை

மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள 13 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட தேசிய தரச்சான்றிதழுடன் பரிசுத்தொகையை அந்தந்த அரசு மருத்துவமனைகளின் தலைமை மருத்துவ அலுவலர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

தேசிய தர உறுதித் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சுகாதார சேவைகள், சுகாதார குறியீடு, முறையான பராமரிப்பு மற்றும் அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளின் கருத்துக்கள் ஆகியவற்றை தேசிய தர குழு நிபுணர்கள் ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மருத்துவமனைகளுக்கு, மத்திய அரசு பரிசுத் தொகையும், தேசிய தரச் சான்றிதழும் வழங்கி பாராட்டி வருகிறது. இந்த பரிசுத் தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

அந்த வகையில், மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய தர உறுதித் திட்டத்தில் 2019-2020-ம் ஆண்டிற்கு, காஞ்சிபுரம் மாவட்டம் – காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, செங்கல்பட்டு மாவட்டம் – தாம்பரம் அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் மாவட்டம்-ஆம்பூர் அரசு மருத்துவமனை மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, ராணிப்பேட்டை மாவட்டம் – சோளிங்கர் அரசு மருத்துவமனை, தருமபுரி மாவட்டம் -அரூர் அரசு மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்டம்-திருச்செந்தூர் அரசு மருத்துவமனை,

விருதுநகர் மாவட்டம் – அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, ராமநாதபுரம் மாவட்டம்-பரமக்குடி அரசு மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, கோயம்புத்தூர் மாவட்டம் – மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, நாமக்கல் மாவட்டம் – ராசிபுரம் அரசு மருத்துவமனை, கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூர் அரசு மருத்துவமனை ஆகிய 13 அரசு மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய தர சான்றிதழ்களுடன் பரிசுத் தொகையாக 2 கோடியே 53 லட்சத்து 42 ஆயிரத்து 632 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்பட்ட தேசிய தரச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகைக்கான காசோலைகளை தேசிய தரச் சான்றிதழ்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளின் தலைமை மருத்துவ அலுவலர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் அஜய் யாதவ், மாநில நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் கே.செந்தில் ராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் தி.செல்வ விநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர், டாக்டர் எஸ்.குருநாதன், Zee எண்டர்டெய்ன்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் புனித் கோயங்கா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.