தற்போதைய செய்திகள்

ஊடக நண்பர்களுக்கு பாதுகாப்பாக அம்மாவின் அரசு இருக்கும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

மதுரை

தவறுகளை சுட்டிக்காட்டினால் அதை சரி செய்ய அரசு தயாராக இருக்கிறது. புரட்சித்தலைவி அம்மாவின் அரசு ஊடக நண்பர்களுக்கு எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்கும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கூட்டரங்கில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது:-

ஊடகம் தான் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக திகழ்கிறது. ஊடகத்தினுடைய அடித்தளமாக செய்தியாளர்களும் ஒளிப்பதிவாளர்களும் மிக முக்கியமானவர்களாக இருக்கிறார்கள், இவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து தினந்தோறும் செய்திகளை சேகரித்து வருகின்றனர். இந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணை கொடுக்கும் விதத்தில் தான் சிக்கன நாணய சங்கம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சங்கத்தின் மூலம் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அவர்களின் தேவைகளை அரசாங்கத்திடமும் வங்கிகளின் மூலமாகவும் கேட்டு பெற்றுக்கொள்ள முடியும். ஊடக நண்பர்களோடு மிக இணக்கமாக இருந்தவர்கள் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான்.

இன்றைக்கு இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்றால் அன்றைய திராவிட இயக்க தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் மேடை பேச்சுகளையும் பத்திரிகையின் மூலமாகவே மக்களிடம் கொண்டு சேர்த்தனர். இன்றைக்கு திராவிட இயக்கம் இந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்றால் ஊடகங்கள் தான் அதற்கு மிக முக்கிய காரணம்.

இந்த சிக்கன நாணய சங்கம் இன்று மதுரையில் முதன் முதலாக துவங்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் சிக்கன நாணய சங்கம் இந்தியா முழுவதிலும் துவங்கும் அளவிற்கு சிறந்து விளங்கும். ஒரு குழுக்களாக சேர்ந்து Youtube! channel துவங்க விரும்புவோருக்கும் சான்றுகள் சரிபார்த்து அவர்களுக்கு உதவுவதற்கு கூட்டுறவு சங்கம் தயாராக உள்ளது.

இந்தியாவில் எண்ணற்ற கூட்டுறவு சங்கங்கள் இருந்தாலும் செய்தியாளர்களுக்கு இந்தியாவிலேயே முறைப்படி பதிவு செய்து முதன் முதலில் மதுரையில் தான் துவங்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா காலகட்டத்தில் பத்திரிகை நண்பர்கள் ஆகிய உங்களுக்கும் பொதுமக்களுக்கும் புரட்சித்தலைவி அம்மாவின் அரசு இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.

புரட்சித்தலைவி அம்மாவின் அரசு ஊடக நண்பர்களுக்கு உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் எப்பொழுதும் இருக்கும். மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் எண்ணற்ற உதவிகளை வழங்கியதும் புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தான். அரசின் பக்கம் இருக்கும் தவறுகளை ஊடக நண்பர்கள் சுட்டிக்காட்டினால் அதை ஏற்று உடனடியாக அதை சரிசெய்ய அரசு தயாராக உள்ளது. நமது முதல்வர் எதையும் ஆராய்ந்து தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்பட்டு வருகிறார். ஆகையால் ஊடக நண்பர்கள் அனைவரும் ஜனநாயகத்தின் பக்கம் இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரா.ராஜேஷ், இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் அ.ஜீவா, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.