தற்போதைய செய்திகள்

ஆணுக்கு நிகராக பெண்கள் சிறந்து விளங்க முதல்வர் செயல்பட்டு வருகிறார் – அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம்

திருப்பத்தூர்

சமுதாயத்தில் பெண்கள் அனைத்து நிலைகளிலும் ஆணுக்கு நிகராக சிறந்து விளங்க வேண்டும் என்று முதல்வர் செயல்பட்டு வருகின்றார்.

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் வேளாண் இயந்திரமயமாக்கலை அதிகரிக்கும் பொருட்டும் 9 ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்புகளுக்கு 80 சதவீதம் அரசு மானியத்துடன் ரூ.10 லட்சம் மதிப்பிலான நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றம் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.99,999 மதிப்புடைய பேட்டரி பொருத்தப்பட்ட நகரும் சிறப்பு சர்கர நாற்காலிகளையும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார். நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் தலைமை தாங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் உள்ள பெண்களை சமுதாயத்தில் அனைத்து நிலைகளிலும் ஆணுக்கு நிகராக கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தினார். அதனடிப்படையில் முதலமைச்சரும் மகளிருக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

எதிர்காலத்தில் விவசாய தொழில்தான் உலகில் முக்கிய பணியாக இருக்கும் இந்த உழவு தொழில் பெண்களின் பங்களிப்பையும் ஈடுபாட்டையும் அதிகப்படுத்தி அவர்களின் வாழ்வாதார பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு வேளாண் இயந்திரங்களை வழங்கிட நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன்மூலம் பெண்கள் தங்கள் பகுதிகளில் வேளாண்மை இயந்திரங்களை விவசாய பணிகளுக்கு வாடகைக்கு கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை மகளிர் குழுக்கள் பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒன்பது ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு வேளாண் இயந்திர வாடமை மையம் அமைப்பதற்காக வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 80 சதவீதம் அரசு மானிய உதவியும், மகளிர் திட்ட அலுவலகம் மூலமாக ரூ.1.5 லட்சம் உதவியும், குழுக்களின் பங்களிப்பு ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ரோட்ட வேட்டர், பவர் வீடர், சிறிய நெல் அறுவடை இயந்திரம் மற்றும் பவர் ஸ்பரேயர் அடங்கிய நவீன இயந்திரம் ஒவ்வொரு கூட்டமைப்புகளுக்கு வழங்கப்படுகின்றது.

வழங்கப்படும் இயந்திரங்களை ஊராட்சியில் மகளிர் குழு சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு வேளாண் தொழிலாளர் படையினை அமைத்து அதன் மூலம் வேளாண் இயந்திர வாடகை மையத்தினை சிறப்பாக செயல்படுத்தி அரசின் செயல்பாட்டிற்கு திருப்பதியளிக்கும் வகையில் நம்பிக்கையோடு செயல்பட்டு பயனடைய வேண்டும்.

அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகப்படியான நலத்திட்டங்களை செயல்படுத்தும் அரசாக தமிழக அரசு இயங்கி வருகின்றது. அந்த வகையில் மிகவும் வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்கி பயன்படுத்தி வரும் நகரும் ரூ.1 லட்சம் மதிப்புடைய பேட்டரியால் நகரும் சிறப்பு சக்கர நாற்காலி தமிழக அரசு மூலம் ஏழை எளிய தசை சிதைவு நோய் மற்றும் முதுகுதன்டு வடம் பாதித்த நபர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகின்றது.

வீடுகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு அக்கம் பக்கம் நகர முடியாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் நாற்காலி உதவியாக இருக்கும். இதனை அவர்களாகவே எளிதில் உபயோகிக்க தன்னிச்சையாக வெளியே சென்று வர முடியும்.

இச்சக்கர நாற்காலி சாய்வு தன்மை படுக்கையிலிருந்து படுக்கைக்கு மாறுவதற்கு ஏற்றவாறு சிறப்பு தன்மையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பேட்டரி சார்ஜ் செய்தால் சுமார் 30 கி.மீ. வரை செல்லலாம் என்பது சிறப்பு இவற்றை எல்லாம் ஏழை எளிய மக்கள் எல்லாம் எண்ணி பார்க்கவே முடியாது ஆனால் புரட்சித்தலைவி அம்மாவின் அரசு முதலமைச்சர் வழியில் தொடர்ந்து வழங்கி வருகின்றது. இதற்கெல்லாம் ஒவ்வொருவரும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த கொரோனா கால ஊரடங்கு தளர்வு நாட்களில் மத்திய மாநில அரசுகள் மூலம் பொது போக்குவரத்து மற்றும் இதர தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் நோயின் தாக்கத்தை உணர்ந்து ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் வெளியில் சென்று வருவதையும் நோயின் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயமாக அரசின் விதிமுறைகளை பின்பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் மகேஷ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, உதவி இயக்குநர் ஊராட்சிகள் அருண், வேளாண் பொறியியல்துறை உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், ஜோலார்பேட்டை சீனிவாசன், ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் ராமஜெயம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ரமேஷ், உதவி திட்ட அலுவலர்கள் கலைச்செல்வன், பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.