சிறப்பு செய்திகள்

தொழில் வளம், வேளாண்மை சிறக்க முழு கவனம் செலுத்துகின்ற அரசு அம்மாவின் அரசு – முதலமைச்சர் பேச்சு

சென்னை

தொழில் வளம், வேளாண்மை சிறக்க முழு கவனம் செலுத்துகின்ற அரசு அம்மாவின் அரசு என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் பேசியதாவது:-

வேளாண் பணிகளைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை 100 சதவிகிதப் பணியாளர்களை வைத்து இயங்கலாம் என அரசு அனுமதி வழங்கி, தற்போது சுமார் 75 சதவிகிதப் பணியாளர்களை வைத்து தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. குடிமராமத்துத் திட்டம், தூர்வாரும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவதால் பருவ காலங்களில் பொழியும் மழை நீர் முழுவதும் சேமிக்கப்பட்டு, வேளாண் பணிக்கும், குடிப்பதற்குமான நீர் ஆதாரத்தை அம்மா அரசு உருவாக்கியுள்ளது.

அம்மாவின் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்திலும், அம்மா அரசின் கடும் முயற்சிகளின் காரணமாக அதிக முதலீட்டை ஈர்த்து, சுமார் 42 தொழில்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்தான் பெரும்பாலும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதேபோல, இந்திய அளவில் ஜிடிபி 4 சதவீதம் உள்ளது. ஆனால், தமிழகத்தில் ஜிடிபி 8 சதவீதமாக உள்ளது.

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதி வரை குறிப்பிட்ட காலத்தில் சென்றடைந்ததால் குறுவை சாகுபடி பரப்பு 3.50 லட்சம் ஏக்கர் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 4.11 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, அம்மாவின் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் வேளாண் தொழில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது.

வேளாண் பெருமக்களுக்கு இடுபொருள், விதை நெல் உரிய காலத்தில் கிடைத்ததாலும், தண்ணீர் குறிப்பிட்ட நேரத்தில் முழுமையாகச் சென்றடைந்ததாலும், தமிழகத்தில் அதிக விளைச்சல் பெற்று, இதுவரை அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆண்டொன்றுக்கு 23 லட்சம் மெட்ரிக் டன் செய்யப்பட்டு வந்த நெல் கொள்முதல் இந்த வருடம் 30 லட்சம் மெட்ரிக் டன்னாக கொள்முதல் செய்யப்பட்டு, ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

தொழில் வளம், வேளாண்மை சிறக்க முழு கவனம் செலுத்துகின்ற அரசு அம்மாவின் அரசு என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். வடகிழக்கு பருவமழை காலதாமதமாவதால் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, தண்ணீர் தேங்கினால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் எங்கும் தண்ணீர் தேங்காமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.