திராவிட மாடல் என்று கூறுபவர் மின் கட்டணத்தை உயர்த்துவதா?ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கேள்வி

சேலம்
தி.மு.க.வில் ஜனநாயகம் உள்ளதா? திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு மின் கட்டணத்தை உயர்த்துவதா என்று ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சேலம் புறநகர் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் எடப்பாடி நகர கழக செயலாளர் ஏ.எம்.முருகன் தலைமையில் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம், தலைமை கழக பேச்சாளர் அ.அ.கலில் பாட்சா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான வைகைச்செல்வன் பேசியதாவது:-
கழக இடைக்கால பொதுச்செயலாளராக இருந்து வரும் எடப்பாடியார் இன்னும் 30 நாட்களில் நிரந்தர பொதுச்செயலாளராக ஆக உள்ளார். கழகத்தை முடக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர்கள் மீது விடியா திமுக அரசு பொய் வழக்கு போடுகிறது. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். யார் யாரோ திராவிட மாடல் என்று கூறுகின்றனர். கருணாநிதி சர்க்காரியா கமிஷன் கூறியபடி குற்றவாளி. அவரது மகன் திராவிட மாடல் பற்றி பேசுகிறார்.
முதலில் திமுகவில் ஜனநாயகம் உள்ளதா? திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு மின் கட்டணத்தை ஸ்டாலின் உயர்த்தியுள்ளார். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு, அணில் மந்திரி சொல்வதால் அட்டகாசம் செய்கின்றனர்.
எடப்பாடியார் சட்டமன்றத்தில் கேள்வி மேல் கேள்வி எழுப்பி பேசுகிறாரே, திராவிட மாடல் என்று கூறும் ஸ்டாலினால் பதில் தர முடியுமா? தற்போது தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது, ஆனால் தடையில்லாமல் மது கிடைக்கிறது.
தமிழகத்தின் நிழல் முதல்வர்களாக சபரீசனும், உதயநிதியும் செயல்பட்டு தமிழ்நாட்டை கூறுபோட்டு வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற பெயரில் சினிமா துறையை முழுவதும் தனது கைவசப்படுத்தி விட்டார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கட்சி கொள்கைக்கு அப்பாற்பட்டு பெரும் லாபம் சம்பாதித்து வருகிறார்.
திமுக அமைச்சர்கள் சுயமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட வேண்டும். ஆனால் சட்டமன்ற உறுப்பினராக உள்ள உதயநிதிக்கு தான் இன்று முதல் மரியாதையாக உள்ளது.
எடப்பாடியார் ஆட்சி காலத்தில் இதுபோன்று நடைபெறவில்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான முதல்வராக எடப்பாடியார் இருந்தார். யார் வேண்டுமானாலும் அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்றோ அமைச்சர்களுக்கு கூட மரியாதை இல்லாத சூழல் தமிழகத்தில் உள்ளது.
எடப்பாடியாரை விமர்சிப்பதற்கு அருகதை இல்லாதவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். தான் இருக்கும் காங்கிரஸ் கட்சியிலேயே அவருக்கு மரியாதை இல்லை. ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் கட்சியின் கழிவு பொருள். காங்கிரஸ் கட்சியில் இருந்து கழட்டி விடப்பட்டவர் எல்லாம் எடப்பாடியாரை விமர்சனம் செய்யக்கூடாது.
தமிழகத்தில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளும் அதிகரித்து உள்ளது. விடியா திமுக ஆட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த எதையும் செய்யவில்லை. திமுக கூட்டணி கட்சிகளில் உள்ள இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, உள்ளிட்ட கட்சிகள் மக்கள் பிரச்சிசனைக்கு முக்கியத்துவம் கொடுத்து போராடவில்லை. திமுகவின் செயல்களுக்கு மவுனம் சாதித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் உள்ளிட்டவைகளை நிறுத்தி வைத்துள்ளனர். இனிவரும் காலத்தில் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தாது.
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வேன் என கூறிய திமுக அரசு இன்னும் ஏன் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை? தமிழகத்தின் நிதி அமைச்சர் மாவட்ட கலெக்டர்களை கூட விமர்சனம் செய்து மாவாட்டும் கலெக்டர் என பேசுவது வேடிக்கையாக உள்ளது.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அளித்த முக்கிய கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது என கூறியது இதுவரை அமல்படுத்தவில்லை, குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் வழங்குவேன் என கூறியது என்ன ஆனது? அதேபோல் ஓ.ஏ.பி தொகையை ரத்து செய்தது கண்டனத்திற்குரியது.
மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை அளித்து எதையும் நிறைவேற்றாத அரசாக திமுக அரசு உள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில் எடப்பாடியார் தலைமையிலான கழக ஆட்சி தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்.
ஓ.பன்னீர்செல்வம் காலாவதியான மாத்திரை, காலாவதியான மாத்திரையை உண்டால் உடல் பாழாகி விடும், அதுபோல ஓ.பி.எஸ்சை கழகத்தில் பயன்படுத்த முடியாது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.