சிறப்பு செய்திகள்

நிதியே இல்லை, இல்லை என்கிறார்கள் பேனா வைக்க ரூ.80 கோடி எப்படி வந்தது?விடியா தி.மு.க. அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் கேள்வி

திருச்சி,

கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி இல்லத்திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு எழுச்சிமிகு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த வரவேற்பை ஏற்றுகொண்ட முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள வயர்லெஸ் ரோட்டில் அலைகடலென திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் உரையாற்றியதாவது:-

தி.மு.க அரசு பொறுப்பேற்ற 15 மாத காலத்தில் என்ன திட்டங்களை செய்தீர்கள்?. என்று மக்கள் கேட்கின்றார்கள். “ஆன்லைன் ரம்மி” கொண்டு வந்தது தான் மிச்சம். “ஆன்லைன் ரம்மி” சூதாட்டம் மூலம் வரும் வருமானம் சிந்தாமல், சிதறாமல் யாருக்கு போய் சேர வேண்டுமோ அங்கே போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே, மக்களுக்கு நன்மை கிடைக்கின்ற எந்த திட்டத்தையும் இந்த விடியா தி.மு.க அரசு இதுவரை செய்யவில்லை.

தினந்தோறும் “போட்டோ சூட்” நடத்த போவார்கள். படம் எடுப்பார்கள். தொலைக்காட்சியில் காட்டுவார்கள். இதுதான் அன்றாட நிகழ்ச்சி. மக்களுக்கு நன்மை பெயர்க்கக்கூடிய எந்த திட்டத்தையும் இந்த விடியா அரசு கொண்டு வரவில்லை. நிறைவேற்றவுமில்லை. இதுதான் நாம் கண்ட பலன்.

நிதியே இல்லை என்கிறார்கள். ஆனால் கடலில் பேனா வைக்க மட்டும் நிதி எப்படி இருக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள். எழுதாத பேனாவுக்கு 80 கோடி ரூபாய் செலவிடுகிறார்கள். அந்த தொகையில் ஆறரை கோடி பேருக்கு பேனாவே கொடுத்து விடலாம். ரூ.1 கோடியில் பேனா வைக்கலாம்.

இன்றைய தினம் உங்கள் ஆட்சி வந்த பிறகு என்ன செய்தீர்கள்?. ஆனால், ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்ல போனஸ் கொடுத்தார்கள். சொத்து வரி போனஸ், மின் கட்டண உயர்வு போனஸ், குடிநீர் கட்டணம் உயர்வு போனஸ் கொடுத்தார்கள்.

திருச்சி மாநகராட்சியில், உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் இதுவரை 2000 ரூபாய் வீட்டு வரி கட்டினால், இனி 4000 ரூபாய் வீட்டு வரி கட்ட வேண்டும். இப்படி தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு 2000 ரூபாய் போனஸ் கொடுத்திருக்கிறார்கள். கொரோனாவால் இரண்டு ஆண்டு காலமாக வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல் இருக்கின்ற ஒரு சூழ்நிலையில் வரி உயர்வு தேவையா?

ஏதோ சிறிதளவு வரி உயர்த்தினால் பரவாயில்லை. மக்கள் தலையில் கடும் வரிச்சுமையை சுமத்தி இருக்கிறார்கள். இதுபோல் மின் கட்டணம் உயர்வு 50 ரூபாய் உயர்த்த போகிறார்கள் என்று பார்த்தால் 50 சதவீதம் உயர்த்தினால் மக்கள் எப்படி தாக்கு பிடிப்பார்கள். சிந்தித்து பாருங்கள்.

அதேபோல் தொழிற்சாலைகளுக்கும் மின் கட்டண உயர்வு. இப்படி மின் கட்டங்களை உயர்த்தினால் எல்லா தொழிற்சாலையும் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடும். நம் மாநிலத்தில் தொழிற்சாலையே வராமல் போய்விடும்.

உங்களுடைய தி.மு.க தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் 4.8 லட்சம் கோடி கடன் இருப்பதாக சொன்னீர்கள். அதை வைத்து தானே நீங்கள் தேர்தல் அறிக்கை வெளியிட்டீர்கள். உங்களுக்கு தெரிந்து தானே தேர்தல் அறிக்கையை வெளியிட்டீர்கள். யாரை ஏமாற்றுகின்ற நாடகம்.

மக்களை ஏமாற்றி, கவர்ச்சிகரமாக பேசி, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு அப்படியே அந்தர் பல்டி அடிக்கிறார்கள். நிதி இல்லை என்று தெரிந்து தானே உங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டீர்கள். நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டீர்கள்.

இன்றைக்கு மாதம்தோறும் குடும்பத் தலைவிகள் உரிமைத்தொகையாக 1000 ரூபாய் வேண்டும் என்று உரிமையோடு கேட்கிறார்கள். என்ன ஆச்சு 1000 ரூபாய். அதேபோல் கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் கொடுத்தார்களா? இல்லை. இது ஏமாற்று வேலை.

மாணவர்களுக்கு வங்கியிலே வாங்கிய கடன் ரத்து என்று சொன்னார்களே செய்தார்களா? அதேபோல், மகளிர் சுய உதவிக்குழு வாங்கிய வங்கிக்கடன் இதுவரைக்கும் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. ஏதேதோ காரணத்தை காட்டி, ஏதேதோ கண்டிஷன் போட்டு வங்கி கடன் ரத்து யாருக்கும் கிடைக்காத ஒரு சூழ்நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கி உள்ளது.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.