கஞ்சா ஒழிப்பில் நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தி.மு.க அரசு தூங்குகிறது

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
மதுரை
பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள்கள் அதிகரிக்க தொடங்கியிருப்பது மிகவும் அபாயகரமான சூழ்நிலையாக இருக்கிறது என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கஞ்சா ஒழிப்பில் நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தி.மு.க அரசு தூங்குகிறது என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.
மதுரை மாவட்டம் அரியூர் கிராமத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்பொழுது பருவமழை பெய்து வருகிறது, மேட்டூரில் ஒரு லட்சத்து 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மக்களுக்கு உரிய விழிப்புணர்வை அரசு வழங்க வேண்டும். கடந்த மாதம் பெய்த மழையால் நீரில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளனர். ஆகவே உரிய வழிகாட்டுதலை அரசு மக்களுக்கு வழங்கிட வேண்டும்.
தமிழகத்தில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக தமிழக காவல்துறை இருந்தது. ஆனால் தமிழகத்தில் சுதந்திரமாக காவல்துறை செயல்படுவதற்கு அரசு முன் வருமா? பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள்கள் அதிகரிக்க தொடங்கி விட்டன.
இது மிகவும் அபாயகரமான சூழ்நிலையாக இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு உரிய நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்தாலே போதும்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் காவல்துறை மானிய கோரிக்கையில், சட்டம், ஒழுங்கு சீர்கேடு குறித்து இரண்டரை மணி நேரம் விளக்கி பேசினார்.
அதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம், போதை பொருட்கள் அதிகரித்து வருவது குறித்தும் அரசுக்கு கூறுகிறார். ஆனால் தமிழக அரசு கும்பகர்ணனை போல் தூங்குகிறது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
பேட்டியின் போது அவருடன் கிளை கழக செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான அரியூர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.