சிறப்பு செய்திகள்

தலைவனாக ஆசையில்லை என்பவர் பிரச்சினைகளை ஏன் உருவாக்குகிறார்

ஓபிஎஸ்சுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் பதிலடி

திருச்சி,

தலைவன் ஆவதற்கு ஆசையில்லை என்பவர் தலைமைக்கழகத்தை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது எதற்காக என்றும் ஏன் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்குகிறார் என்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை செல்லும் முன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

முன்னாள் அமைச்சரும், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநில செயலாளர் என்.ஆர்.சிவபதியின் மூத்த மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்தேன். திருச்சியில் மாநகர் மாவட்ட, புறநகர் மாவட்ட கழகங்கள் சார்பாக சிறப்பான வரவேற்பை எனக்கு நல்கினார்கள்.

கேள்வி: அ.தி.மு.கவில் மீண்டும் சசிகலா, டி.டி.வி.தினகரனை இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளாரே?

பதில்: அது அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பம்.

கேள்வி: ஓ.பன்னீர்செல்வமும் சரி, சசிகலாவும் சரி, எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று சொல்வது பற்றி உங்களுடைய நிலைப்பாடு ஏதாவது இருக்கிறதா?

புதில்: என்னுடைய நிலைப்பாடு என்று ஒன்றும் இல்லை. தொண்டர்களின் நிலைப்பாடு தான் என்னுடைய நிலைப்பாடு. தொண்டர்கள் என்ன கருத்தோ அது தான் என்னுடைய கருத்து. எனக்கு தனிப்பட்ட கருத்து கிடையாது. தொண்டர்கள் இருந்தால் தான் கட்சி.

கேள்வி: எனக்கு முதலமைச்சர் ஆவதற்கோ, கட்சி தலைவன் ஆவதற்கோ ஆசை இல்லை என ஓ.பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறாரே.

பதில்: அப்புறம் ஏன்? இவ்வளவு பிரச்சினை செய்கிறார். தலைமைக்கழகத்தின் உள்ளே புகுந்து தலைமைக்கழகத்தை நொறுக்கி, தலைமைக்கழகத்தின் உள்ளே இருந்த கம்ப்யூட்டர், அறைகளை எல்லாம் சேதப்படுத்தியது எதற்காக? பதவி ஆசை இல்லை என்றால் ஏன் தேவையில்லா பிரச்சினைகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

பேட்டியின் போது, மாவட்ட கழக செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான நத்தம் இரா.விஸ்வநான், திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், மு.பரஞ்ஜோதி, கழக அமைப்புச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார், மாவட்ட ஆவின் சேர்மனும், மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளருமான பொறியாளர் சி.கார்த்திகேயன், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர்கள் ஜெ.சீனிவாசன், பொன்.செல்வராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.